பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1


யாகும். அருட்பா என்று பெயர்கொண்ட திருமுறையில், 'கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக' என்று பாடியிருப்பரேல், கண்ணோட்டத்தையும் மக்களாட்சியையும் மதித்த வள்ளலாரின் குடியரசு முறை தெளிவாகும்.

அடிகளாரின் கருத்துவளர்ச்சியைச் சென்னைச் சிந்தனை, வடலூர்ச் சிந்தனை என இருவகைப்படுத்தலாம். முதற் பகுதியில் (1825-1858) பழைய சைவத்திருமுறைப் போக்காகவும், பிற்பகுதியில் (1859-1874) புதிய பொதுநெறிப் போக்காகவும் அருட்பாசுரங்கள் காட்சி யளிக்கின்றன, முருகவழிபாடு, மூவருள் சிவன் (முதன்மை, சிவனடிப்பேறு, ஐந்தெழுத்தின் சிறப்பு, அடியார் கூட்டம், பெண்ணாசையின்மை, ஐம்புலவொடுக்கம், முத்திப்பேறு, சித்தாந்த மெய்ம்மைகள் என்ற மரபுப்பொருட்கள் முற்பகுதியில் பழையதடத்தில் நடைப்படுகின்றன.

பூமாந்தும் வண்டெனநின் பொன்னருளைப் புண்ணியர்கள்
தாமாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்து நின்றார் ஐயோநான்
காமாந்த காரமெனும் கள்ளுண்டு கண்மூடி
எமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே

என்ற நடைப்பட்ட மரபியற்பாசுரங்களே கதுங்குழிக்கு வருவதற்கு முன்புவரை மிகுதியாகவுள. பின்வாழ்விலும் இத்தகைய பாசுரங்கள் இருந்தாலும், புதிய வேகத்தையும், குற்றங்குறை காணப் பொறாத்துயரத்தையும், மன்பதை தழுவிய இவ்வுலகச் சீர் திருத்தத்தையும், பயிரையும் உயிராகக்கொண்ட ஆன்மநேயவொருமைப் பாட்டையும், மரணமிலாப்பெருவாழ்வையும், சீவ காருணியம் என்னும் உயிரிரக்கத்தையும் கருங்குழி வடலூர் சித்திவளாகப் பாடல்கள் காட்டுகின்றன.