பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

239

 செலுத்தும் தூய நெஞ்சத்தினராகிய இராமலிங்க வள்ளலார் வடலூரில் தருமச்சாலையில் தங்கியிருந்த போது எல்லாம் வல்ல சிவபெருமானே சித்தராக நள்ளிரவில் செம்பருக்கைக்கற்கள் வருத்த நடந்தருளி வள்ளலார் பால் எழுந்தருளித் திருக்கதவம் திறந்திடும் என்று சொல்லி உள்ளே புகுந்து தம்கையிலுள்ள திருநீற்றுப் பையிலிருந்து பெருவண்ணக் கொழுந்தாகிய பொற்பூப் போலும் ஞான விளக்கத்தினை நல்கிச் சித்தித் திறத்தை வழங்கியருளினார் என்பதும், அங்ஙணம் வழங்கிய இறைவன், 'மகனே வருந்தாதே இதனை வாங்கிக்கொள். இங்கு மகிழ்ந்து உறைக, உலகில் விளையாடி வாழ்க, மயக்கத்தை ஒழித்து மகிழ்க. துன்பமெலாம் நீங்குக. சீல நிலையுது வாழ்க, பண்பொடு வாழ்ந்திடுக, உரிமையொடு வாழ்க, மந்தவுருவாம் மனத்தால் மயக்கமுறேல், அஞ்சேல், பெருமையிலே பிறக்குக நீ, கொலை ஒழித்த நிலை தனியே பொருந்துக, நண்ணி நீ எண்ணியவாறு நடத்துக, தயவினொடு வாழ்க' எனவாழ்த்தி, தன்னுருவம் போன்றதொரு சத்தியினைத் தந்து இன்னும் நெடுங்காலம் புலவர் தொழ வாழ்க என வாழ்த்தி மறைந்தருளினா ரென்பதும் ஆகிய செய்திகள் வள்ளலார் அருளிய அருட் பிரகாச மாலை என்னும் பனுவலில் பல முறையும் குறிக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு எல்லாம் வல்ல சிவபெருமான் நள்ளிரவில் வள்ளலார்பால் எழுந்தருளித் திருக்கதவந்திறப்பித்து எல்லாம் செய்ய வல்ல சித்தித் திறத்தை அறிவுறுத்தியருளினார் என வள்ளலார் நெஞ்சம் நெக்குருகிப் பாடுதலால், அவர் நள்ளிரவில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த போது இறைவனருளால் சித்தி நிலை கைவரப் பெற்றமை நன்கு புலனாகும்.

உலக மக்களது ஆரவாரத்திற்கு இடமின்றி எல்லோரும் உறங்கும் நள்ளிரவிலே தனித்திருந்து