பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மரணமிலாப் பெருவாழ்வு


இறைவனது திருவருட் சுதந்திரத்தை வேண்டிப் பெற்ற அருட்பிரகாச வள்ளலார் அழியும் தன்மையதாகிய ஊனுடம்பினை மாற்றி அழியா இயல்பினதாகிய அருளுடம்பினைப் பெற்று உலக மக்கள் எல்லோரும் எக்காலத்தும் இவ்வுலகில் நிலைபெற்று வாழ வேண்டும் என்னும் ஆராத பெரு வேட்கையுடன் 'சித்தாய வேடத்தாய்' (5-62-1) என அப்பரடிகள் அருளியவாறு எல்லாம் வல்ல சித்தராய் எழுந்தருளிய இறைவனைச் செந்தமிழ்ப் பனுவலால் பரவிப் போற்றிய சித்தராவார்.

நாம் பெற்றுள்ள பூதவுடம்பு என்றாவது ஒரு நாள் அழியக் கூடியதே. நிலவாத அப் புலால் உடம்பினை மாற்றி அன்பும் அருளும் இன்பும் உருவாகிய தூய நல்ல உடம்பினை இறைவன் அருளால் இப்பிறப்பிலேயே பெற்று, இவ்வுலகம் உள்ளளவும் இறைவனை அன்பினால் போற்றி ஆருயிர்கட்கெல்லாம் அன்புடையராய் வாழ்தல் என்பது இறைவனருளால் பெறுதற்குரிய திருவருள் வாழ்வாகும். இத்தகைய சித்தித் திறத்தால் பெறுதற்குரிய திருவருள் வாழ்வினையே 'மரணமிலாப் பெருவாழ்வு' என வள்ளலார் தாம் பாடிய பனுவல்களில் பல இடங்களிலும் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாம் பெற்றுள்ள யாக்கையும், இளமையும், செல்வமும் நிலையுடையன அல்ல என்னும் உண்மையை