பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

257


நந்தியருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன்
நந்தியருளாலே நானிருந்தேனே'

(திருமந்திரம்-92)

எனவரும் இவரது வாய்மொழியால் நன்கு புலனாகும்.

திருமந்திரப் பனுவல்களை அருளிய சிவயோகியாராகிய திருமூலநாயனார் இறைவனருளால் தாம் பெற்ற எண்வகைச் சித்திகளால், இத்தமிழகத்தே பத்தி நெறியையும் ஞானயோக நெறிகளையும் பரப்பியருளிய திருவருட்சித்தர் ஆவர். அவர் வழியாகத் தமிழகத்தில் சித்தி நெறி தொடர்ந்து வளர்ந்து வந்தது, பிற்காலத்தில் வாழ்ந்த பதினெண் சித்தர்களில் பலர் திருமூலர் அறிவுறுத்திய சித்தி நெறியினை மேற்கொண்டு வாழ்ந்தவர்களே. இவ்வகையில் திருமூலர் மரபு தாயுமான அடிகளாருக்குக் குருவாகிய மெளனகுரு என்னும் ஆசிரியர் காலம் வரை தொடர்ந்து நிலைபெற்று வந்துள்ளது. தாயுமானார் காலத்திலும் இத்தகைய சித்தர்கணத்தார் வாழ்ந்திருக்கிறார்கள். 'முலன் மரபில் வரு மெளனகுருவே', எனவும் - 'வித்தகச் சித்தர்கணமே' எனவும் தாயுமான அடிகளால் தம்முடைய குருவாகிய மெளனகுருவையும் தம் காலத்தில் வாழ்ந்த சித்தர் கணங்களையும் அழைத்துப் போற்றும் பாடல்களால் இச்செய்தி நன்கு புலனாதல் காணலாம்.

கி. பி. 8 ஆம் நூற்றாண்டில் நிலவிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமூலரைக் குருவாகக் கொண்டு சிவயோக நெறியினை மேற்கொண்டொழுகியவர் என்பது, 'நம்பிரான் திருமூலனடியார்க்குமடியேன்' (7-39-6) எனவும் 'நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால் விரல்' (7-45-9) எனவும் வரும் அவர்தம் வாய்மொழி களால் நன்கு விளங்கும்.