பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

275


'முத்தி என்பது முன்னுறு சாதனம்,
அத்தக வென்ற அருட்பெருஞ்சோதி'

(அகவல் 249-250)

சித்திஎன்பது நிலை சேர்ந்த அனுபவம்
அத்திறம் என்ற என் அருட் பெருஞ்சோதி

(அகவல் 251-232)

எனவும் வரும் தொடர்களில் வள்ளலார் குறித்துள்ளமை இங்கு நோக்கத் தகுவதாகும்.

தமிழ்ச் சான்றோர்களால் நெடுங்காலமாக மேற் கொள்ளப் பெற்று வரும் சன்மார்க்க நெறியினை இவ்வுலகில் என்றும் இறவாப் பெருநெறியாகிய சாகாக் கலையுடன் தொடர்பு படுத்தியதன் மூலம் உலக மக்களுக்கு மரணமிலாப் பெருவாழ்வை அறிவுறுத்த வந்த அருளாளர் வடலூர் வள்ளலார் எனக் கூறுதல் மிகவும் பொருத்த முடையதாகும்.

திருமூலர் திருமந்திரத்திலும், ஆளுடையபிள்ளையார், ஆளுடைய அரசு, ஆளுடைய நம்பி பாடியருளிய தேவாரத் திருமுறைகளிலும் சிறப்பாக ஆளுடைய அடிகளாகிய மாணிக்கவாசகர் அருளிய திருவாசகப் பனுவலிலும் தோய்ந்த உள்ளமுடைய இராமலிங்க அடிகளாருக்கு அப்பெருமக்கள் அறிவுறுத்திய சன்மார்க்க நெறியின் பயனாகிய சிவானுபவமும் அருளனுபவமும் உயிரிரக்கமும் இயல்பாகத் தோன்றுவன ஆயின. இவற்றின் பயனாக இவ்வுலக வாழ்வில் மக்கட்குலத்தார்க்கு உளவாகிய பசி, பிணி, பகை ஆகிய துன்பங்களையும், மக்களது அறியாமையினால் விலங்கு பறவை