பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

313


உறழ்ந்து கூறுவனவாகவும், நாடக அமைப்பில் அமைந்த உரையாடல்களும் இடம் பெற்றுள்ளமை காணலாம்.

வள்ளலார் பாடிய கண்ணி, சிந்து முதலிய யாப்பு வகைகளில் சில, தாயுமானவர் பாடல்களில் அமைந்த கண்ணி, சிந்து, முதலிய யாப்பியல் வகையினை அடி யொற்றியுள்ளன.

சைவ, சமய ஆசிரியர் நால்வரும் பாடியருளிய யாப்பு வகையினை அடி ஒற்றி அமைந்த இயலிசைத் தமிழ்ப் பதிகங்கள் பல திருவருட்பாவில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு எல்லாம்வல்ல இறைவனை இசைநலம் பொருந்தப் பரவிப் போற்றும் பத்திப் பனுவல்களாக இராமலிங்க வள்ளலார் பாடிய பாடற் றொகுதியாகிய திருவருட்பா அமைந்துள்ளது. எனவே இயல், இசை நாடகமென்னும் முத்தமிழுக்கும் சிறந்த இலக்கியமாகத் திருவருட்பா திகழ்கின்றமை தமிழ் மக்கள் செய்த தவப்பேறேயாகும்.

உலக மக்களது உணர்வுக்கு அணி செய்வதாய், ஆழ்ந்த பொருளைத் தந்து மக்களது அறிவினை வளர்ப்பதாய், அகமும் புறமுமாகிய உலகியல் ஒழுகலாறுகளை விரித்துரைப்பதாய்த் தெளிவுடையதாய், அன்பும் அறனுமாகிய தெய்வப் பண்பினை வளர்ப்பதாயமைதலே சான்றோர் கவியின் இலக்கணம் என்பர் பெரியோர். அத்தகைய சான்றோர் கவிக்கு இலக்கியமாகத் திகழும் தன்மையது வள்ளலார் பாடிய திருவருட்பாவாகும்.

அருட்பிரகாச வள்ளலார் தம் உள்ளத்திலே அருட்பெருஞ்சோதி ஆண்டவனாகிய இறைவனை இடைவிடாது நினைந்து போற்றி மெய்யுணர்வு பெற்ற அருளாளர் ஆவர். ஆகவே அவர் சிந்தையில் ஊற்றெடுத்து வாயின்