பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

321

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
     சண்முகத் தெய்வமணியே.

(8)

என்பதாகும். முன்னியது முடித்தருளும் முருகப்பெருமான் முன்னிலையில் நின்று தாம் விரும்பியவற்றை வேண்டும் முறையிலமைந்த இப்பாடலில் பெரியோரைத் துணைக் கோடலும், சிற்றினஞ் சேராமையும் இறைவனுடைய பொருள் சேர் திறங்களைப் போற்றிப் பரவுதலும், போய் கூறாமையும், பெருநெறியாகிய சன்மார்க்க நெறியில் ஒழுகுதலும், மக்களின் ஒற்றுமையைச் சிதைக்கும் மத வேற்றுமைக்கு இடம் கொடாதிருத்தலும், மனைவாழ்க்கைக்கு மாறான பெண்ணாசையை மறத்தலும், உயிர்க் குயிராகிய இறைவனை மறவாதிருத்தலும், நல்லறிவும், அருட் செல்வமும், பொருட் செல்வமும், நோயற்ற வாழ்வும், எங்களுக்கு அளித்தருளல் வேண்டும் என இறைவன் முன் நின்று வேண்டுதலும் ஆக உலகமக்கள் அனைவர்க்கும் உரிய உயர்ந்த வேண்டு கோளனைத்தும் அமைய வள்ளலார் இப்பாடலைப்பாடிய திறம் வியந்து பாராட்டுதற்குரியதாகும்.

இறைவன் திருவடித்தாமரைகளை இடைவிடாது சிந்தித்துப் போற்றுவார்க்கு உலகியல் வாழ்வில் பெறுதற்கரிய எல்லா நலன்களும் எளிதிற் கிடைக்கும் என அறிவுறுத்துவது,

நீருண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்ற
     நிலன் உண்டு புலனும் உண்டு
நிதியுண்டு, துதிஉண்டு, மதிஉண்டு, கதிகொண்ட
     நெறியுண்டு, நிலையும் உண்டு
ஊருண்டு, பேர் உண்டு, மணி உண்டு, பணிஉண்டு
     உடையுண்டு, கொடையுமுண்டு