பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

327


அனித்தமறத்திருப் பொதுவில் விளங்கு நடத்தரசே
     அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே.

(4106)

எனவரும் திருவருட்பாவாகும்.

"பழத்தின் இரதமாம்-பாலில் நெய்யாம்"

எனவரும் அப்பர் அருள் மொழி இங்கு நினைவு கூரத் தகுவதாகும்.

இங்ஙனம் பண்ணார்ந்த பாடலால் செந்தமிழ் மொழிக்கு வளஞ்சேர்த்த திருவருட் பிரகாச வள்ளலார், தமது உரைநடைத் திறத்தாலும், தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டு புரிந்துள்ளமை இங்குக் குறிப்பிடத்தகுவதாகும். இராமலிங்க வள்ளலார் இயற்றி உதவிய உரைநடை நூல்களில் மனுமுறை கண்ட வாசகம், சீவகாருண்ய ஒழுக்கம் என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கனவாகும். அருண்மொழித்தேவராகிய சேக்கிழார் நாயனார், தாம் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில் அருளியல் ஆட்சியினை அறிவுறுத்தும் நோக்குடன் பாடியமைத்த மனுநீதி கண்ட புராணத்தை விரித்து விளக்கும் உரை இடை நூலாக அமைந்தது மனுமுறை கண்ட வாசகம் என்னும் இந்நூலாகும். இதன்கண், மனுச்சோழன் அவனுடைய பட்டத்தரசி, மைந்தன் வீதிவிடங்கன், அவனது தேர்க்காலினால் ஊரப்பட்டு இளங்கன்றினை இழந்த தாய்ப்பசு, வாயில் காவலர், மந்திரி, பழிக்குக் கழுவாய் கூறும் அந்தணாளர் முதலியோருடைய மன இயல்புகளை உலகியல் உணர்வும், கற்பனை நயமும், மெய்ப்பாட்டுணர்வும் பொருந்தவும், எவ்வுயிர்க்கும் இரங்கும் அருளின் திறம் மேம்பட்டு விளங்கவும் இனிய, எளிய தமிழ் நடையில் அருட்பிரகாச வள்ளலார் இயற்றி