பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


கடந்து மேலாக விரிந்து நிற்கும் பெருமையாலும், உயிர்தோறும் உயிர்க்குயிராய் உள்நின்று அருள்சுரக்கும் பெருங் கருணைத் திறத்தினாலும், உயிர்களின் முயற்சியால் சென்று அடைய முடியாத 'திரு'வாகிய வீடு பேற்று இன்பத்தினை உயிர்களின் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டு நின்று வழங்கியருளும் அருமைத் திறத்தினாலும் தன்னையொப்பார் ஒருவருமில்லாத தனிமுதல்வன் இறைவன் ஒருவனே என்பது இதன் பொருளாகும். 'தன்னை ஒப்பார் எவரும் இல்லாதவன்” எனவே தன்னின் மிக்கார் ஒருவரும் இல்லான் என்பதும் தானே விளங்கும். ஒரு பொருளுக்கு எடுத்துக் காட்டும் உவமையினை ஒத்தது, உயர்ந்தது என இருவகையாக வகுத்துரைத்தல் மரபு. ஒத்ததனை ஒப்பு எனவும், உயர்ந்ததனை உவமன் எனவும் வழங்குவர் சான்றோர். அம்முறையில் இறைவனுக்கு ஒப்பாக ஒன்றைக் கூறுங்கால் அவனுக்கு ஒப்பாருமில்லை; உயர்ந்தாருமில்லை என்பதனைத் திருமுறை ஆசிரியர்கள் இனிது விளக்கியுள்ளார்கள்.

'ஒப்புடையனல்லன் ஓர் உவமனில்லி' (6-97-10) எனவரும் அப்பர் அருள்மொழி இங்கு ஒப்பு நோக்குதற் குரியதாகும். இவ்வாறு உலக உயிர்த்தொகுதிகளில் ஒன்றையும் உவமை கூற ஒண்ணாதபடி உயர்வற உயர்ந்து விளங்குதல் முழுமுதற்பொருளின் இயல்பாதலின், அம் முதற்பொருளை 'ஒன்றலா ஒன்று' எனக் குறித்தார் மெய்கண்ட தேவர். ஒன்றலா ஒன்று என்றது, உலகாகிய சடப்பொருள், உயிர்களாகிய சேதனப் பொருள் என்னும் இவ்விரு வகையுள ஒன்றினும் அடங்காது இவற்றிற் கெல்லாம் மேலாய் நின்று இவற்றை இயக்கி நிற்கும் முழுமுதற்பொருள் என்றவாறு.