பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

341


பேர்பரவை பெண்மையினில் பெரும்பரவை விரும்பல்குல்
ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை
சீர்பரவை ஆயினாள் திருவுருவின் மென்சாயல்
ஏர் பரவை இடைப்பட்ட என்னாசை எழுபரவை.

(பெரிய-தடுத்தாட்-148)

எனவரும் திருத்தொண்டர் புராணச் செய்யுளாகும். 'இவளது பேர் நங்கை பரவை, இவளது பெண்மைக் குணங்களைக் கூறுமிடத்து பெரிய தேவரவை விரும்புகின்ற திலோத்தமை அரம்பை முதலிய மகளிரும் துதிக்கத் தக்க தெய்வமாகும். வரிசையாக விளங்கும் அழகிய பற்கள் முல்லையரும்பு களாகும். திருமகளும் விரும்பும் அழகுடைய இவளது உடம்பின் அழகிய, மெல்லிய, சாயலின் பரப்பினுள் அகப்பட்ட என்னுடைய ஆசை யானது ஏழுகடல் போன்றதாகும்' என்பது இதன் பொருளாகும். இச்செய்யுளில், திருவுருவின் மென் சாயல் ஏர் பரவையிடைப்பட்ட என் ஆசை எழுபரவை என வரும் தொடர்ப்பொருளை உள்ளத்தில் கொண்ட இராமலிங்க வள்ளலார் 'களிநாவலனை ஈரெழுத்தால் கடலில் வீழ்த்தினேம்' என இறைவரது கூற்றில் வைத்து உணர்த்தினார். இத்தொடரில் ஈரெழுத்து என்றது 'ஆசை' என்னும் குறிப்பினது, கடல் என்றது அதன் பரியாயப் பெயராகிய 'பரவை யென்ற பெயரால் அழைக்கப்படும் நங்கை பரவையாரைக் குறிக்கின்றது. இந்நுட்பம் மேற் காட்டிய பெரியபுராணச் செய்யுளோடு இச்செய்யுளை ஒப்பிட்டு நோக்குங்கால் நன்கு புலப்படுதல் காணலாம். 'களிநாவலனை ஈரெழுத்தால் கடலில் வீழ்த்தினேம்' என வரும் இத்தொடர், பெரியபுராணத்தில் வள்ளலார் கொண்டுள்ள ஆழ்ந்த புலமைத் திறத்தினையும் குறிப்புப் பொருள்படப் பாடலியற்றும் வள்ளலாரின் கவித்திறத் தினையும் ஒருங்கு புலப்படுத்துதல் காணலாம்.