பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364


அருள் விளக்கமேயாகும் இது உண்மை என்று அருமறைகளும் ஆகமங்களும் பறை சாற்றுகின்றன. அவ்வுண்மையைக் கேட்டறிந்து நீ என்பால் கொண்ட வாட்டமெல்லாம் தவிர்வாயாக" எனத் தலைவி தோழிக்கு அறிவுறுத்துவதாக அமைந்தது,

கொடியிடைப்பெண் பேதாய்நீ அம்பலத்தே நடிக்கும்
     கூத்தாடி என்றெனது கொழுநர்தமைக் குறித்தாய்
படிஇடத்தே வான் இடத்தே பாதலத்தே அண்ட
     பகிரண்ட கோடியிலே பதிவிளக்கம் எல்லாம்
அடிமலர் கொண் டையர் செய்யும் திருக்கூத்தின் விளக்கம்
     ஆகும் இது சத்தியம்என் றருமறை ஆகமங்கள்
கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக்
     கேட்டறிந்து கொள்வாய்நின் வாட்டமெலாந் தவிர்த்தே.

(3760)

எனவரும் திருவருட்பாவாகும். இப்பாடல் ஆடவல்லானாகிய இறைவன் இயக்க எல்லா அண்டங்களும் இயங்குகின்றன என்ற உண்மையை வற்புறுத்துவது காணலாம்.

"சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத இறைவனது திருவருட் கூத்தினை அன்புறு சித்தாந்த நடனமாகவும், வேதாந்த நடனமாகவும் முதல் நடு ஈறு இல்லாத சோதி மன்றத்திலே நான்கண்டு கொண்டேன். தோழி அத்திரு நடம் இன்பமயமாய் ஆன்மாவும் சிவமும் ஒன்றாகவும், இரண்டாகவும், ஒன்றுமிரண்டு மின்றாகவும், எல்லாம் செய்ய வல்லதாகவும் தன்னிகரற்ற பரவெளியைக்கடந்த சமரசத் தனிப்பெரு நடனத்தையும் காணப்பெற்றேன். அதனால் எவ்வுயிர்க்கும் தனித்த சுகத்தினை நல்கும் பொதுமன்றத்தின் இயல்பு அதுவாகும்" எனத் தலைவி