பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372


மலைகளின் குமுறல், புயல், இடி, மழை, வெள்ளம், கடலின் கொந்தளிப்பு முதலியவற்றால் உளவாகும் பல்வேறு இடையூறுகளாலும் அநுபவத்தில் உணர்ந்து வருகின்றோம். இவ்வாறு நிகழும் உலகியல் நிகழ்ச்சிகளை யெல்லாம் நுனித்துணரும் நுண்ணறிவும், அன்பு அடக்கம் முதலிய சிறந்த பண்புகளும்,செய்தற்கு அரியனவற்றையும் எளிதிற் செய்து முடிக்கும் செயல் திறனும் வாய்ந்து வாழ்க்கையில் மேன் மேலும் உயர்ந்து விளங்குதற்குரிய மனவுணர்வு கைவரப்பெற்றவர் மக்கட்குலத்தார் ஆவர். இத்தகைய உணர்வுரிமையுடைய மக்களினத்தார், காலந் தோறும் பிறர்க்கு அடிமையாகி அல்லற்படுவதனையும் பிறரை அடிமையாக்கி அல்லற்படுத்துவதனையும் எண்ணி வருந்திய இராமலிங்க வள்ளலார், தமது திருவருளநுபவத்தால் மக்கள் பெறுவதற்குரிய உண்மையான சுதந்தரமாவது எது என்பதனைத் தெளிவாக உலக மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை இங்கு நோக்கத் தகுவதாகும்.

யான் எனது என்று உரிமை பாராட்டுதற்குரிய நிலையில் அமைந்த நமது உடம்பினையும் அந்த உடம்பினைக் கருவியாகக் கொண்டு நுகரப்படும் உலக நுகர்ச்சிகளையும் அந்நுகர்ச்சிகளை நுகரும் வினைமுதல் (கர்த்தா) ஆகிய ஆன்மாவையும் நமக்கே உரிய உடைமைப் பொருளாகக் கொண்டு உரிமை பாராட்டி வருகின்றோம். நமது உடம்பு நாம் விரும்பியவண்ணம் தொழில் புரிதற்கும், விரும்பிய நாள்வரை நிலைபெறுதற்கும், உரிய தகுதியைப் பெறுவதே தேகசுதந்தரம் எனப்படும். உடம்போடு கூடிவாழும் நாம் இவ்வுலகில் விரும்பிய நுகர் பொருள்களை விரும்பிய வண்ணமே பெற்று நுகரும் உரிமையினைப் பெறுதல் போகசுதந்தரம் எனப்படும். நமது ஆன்மா ஐம்புலன்களால் ஈர்க்கப்படாது நமது அறிவின் எல்லைக்குள் அடங்கி ஒழுகுதற்கேற்ற உரிமை