பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

373


யுணர்வுடன் இருத்தலே சீவசுதந்தரம் எனப்படும். இம்மூவகைச் சுதந்தரங்களையும் விரும்பிய நாம், இத்தகைய சுதந்தரங்கள் எளிதில் கிடைக்கப் பெறாமையால் நமது வாழ்க்கையில் பல்வகைத் துன்பங்களையும் அநுபவித்து வருகின்றோம். நமக்கு உரியனவாக நம்மால் விரும்பப்படும் இச்சுதந்தரங்கள் யாவும் என்றும் நிலைபேறுடைய சுதந்தரங்கள் ஆகமாட்டா.

புண்ணிய பாவங்களாகிய இருவினைப் பயன்களை நுகர் தற்கும் ஈட்டுதற்கும் உரிய கருவிகளாக நாம் பெற்றுள்ள, மெய், வாய், கண், மூக்குச், செவியென்னும் ஐம்பொறிகளும் மாயை எனப்படும் அறிவற்ற சடப் பொருளின் காரியங்களாகுமேயன்றி அறிவுடைய உயிராகிய நம் வயத்தன ஆகமாட்டா. நாம் செய்யும் வினை நிகழ்ச்சிக்கு நிலைக்களமாகிய உலகியற் பொருள்கள் யாவும், மாயையின் காரியமாய், எல்லாம் வல்ல முழுமுதற் பொருளால் தரப்படுவனவே அன்றி, உயிராகிய நமமால் இயற்றிக் கொள்ளப்படுவன அல்ல. நாம் பெற்றுள்ள உடம்பின் அகக் கருவிகளாகிய மனம் முதலியனவும் புறக்கருவிகளாகிய மெய் முதலியனவும் தொழிற்படும் செயல்வகைகளும் உலகுயிர்களை இயக்கும் பேராற்றலாகிய முழுமுதற்பொருளின் வசத்தன அன்றி நம்வசத்தன அல்ல. உடம்பொடு கூடிநின்று வினைகளைச் செய்தற்கும் வினைப் பயன்களை நுகர்தற்கும், கருத்தாவான ஆன்மாக்களாகிய நாமும், விழைவு, அறிவு, செயல்களாகிய நம்முடைய ஆற்றல்களை இறைவன் விளக்கிய நிலையில் விளங்கப் பெற்றும் அல்லாத வழி விளங்கிக் கொள்ளும் வாய்ப்பு இன்றியும் தம்வயம் இழந்த நிலையில் உள்ளோம்.

இவ்வாறு தன்வயத்தரல்லாத ஆன்மாக்களாகிய நாம் தன் வயத்தனாகிய தனிமுதல்வனது அருளாணையின்