பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

389


பாட்டிற்கு இறைவனது மெய்ப்புகழ் இசைந்து அப்பாடல்களுள் அடங்குவதாயிற்று என அறிவுறுத்தும் முறையில் அமைந்தது,

தேவர் அறியார் மால் அறியான்
     திசை மாமுகத்தோன் தான் அறியான்
யாவர் அறிவார் திரு ஒற்றி அப்பா!
     அடியேன் யாதறிவேன்
மூவர் திருப்பாட்டினுக் கிசைந்தே
     முதிர் தீம்பாலும் முக்கனியும்
காவல் அமுதும் நறுந்தேனும்
     கைப்ப இனிக்கும் நின்புகழே.

(908)

எனவரும் திருவருட்பாவாகும்.

ஆளுடைய பிள்ளையார் தமது மூன்று வயதாகிய இளம் பருவத்திலேயே உமையம்மையார் அளித்த ஞானப் பாலையுண்டு திருநெறித் தமிழால் சைவ மெய்ந்நெறியைப் பரப்பும் சமய குரவராகத் திகழ்ந்தருளிய செய்தியினை:

'பயிலு மூவாண்டிற் சிவைதரும் ஞானப்
     பால்மகிழ்ந்துண்டு மெய்ந்நெறியாம்
பயிர்தழைந் துறவைத் தருளிய ஞான
     பந்தன் என்றோங்கு சற்குருவே.'

(3227)

என ஞான சம்பந்தப்பிள்ளையாரை முன்னிலைப்படுத்திப் போற்றும் முகத்தாலும்,

மாநந்த மலர்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன்
றாநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே

(1420)

என வடிவுடையம்மையை முன்னிலைப்படுத்திப் போற்றும் முகத்தாலும் வள்ளலார் குறித்துள்ளமை காணலாம்.