பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

393



"... ... ... ... ... முன்னரசும்
காழிமிழலையரும் கண்டு தொழக் காசு அளித்த
வீழிமிழலை விராட்டுருவ"

(1962 கண்ணி 126)

எனவரும் கண்ணியில் வள்ளலார் விளக்கியருள்வர்.

திருவோத்தூரில் வாழ்ந்த அடியார் ஒருவர் சிவனடியார்களுக்கெனத் தண்ணீர் இறைத்து வளர்த்த பனைகள் அனைத்தும் ஆண்பனையாக, அதுகண்ட புறச்சமயத்தார் அவ்வடியவரை இகழ்ந்துரைத்தனர். அந்நிலையில் அவ்விகழ்ச்சியுரையைப் பொறாத அவ்வடியவர் அங்கு வந்த ஆளுடைய பிள்ளையாரிடம் முறையிட்டார். அது கேட்ட 'பிள்ளையார் பூத்தேர்ந்து ஆயன கொண்டு' என்னும் பதிகத்தினைப்பாடி ஆண்பனைகளை யெல்லாம் பெண் பனைகளாக மாற்றிக் குரும்பை ஈன்று காய்க்கும் படிசெய்தருளினார். இச்செய்தியை வள்ளலார் 'ஆண் பனை, பெண் பனையாக்கி' (3031) எனவரும் தொடரில் குறித்துள்ளார்.

திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் என்னும் வணிகர் தாம்பெற்ற பூம்பாவையையும் தன் செல்வம் அனைத்தையும், பாண்டி நாட்டில் புறச்சமய இருள் நீக்கிச் சிவநெறி பரப்பிய ஞானசம்பந்தருக்கே உரிமை செய்து வாழ்ந்தார். தம்மகள் விடந்தீண்டியிறக்க அவளது உடம்பைத் தீயிலிட்டு வெந்த சாம்பரையும், எலும்பையும் ஒர் குடத்தில் வைத்துப் பூசனை செய்து வந்தார். அந்நிலையில் ஆளுடைய பிள்ளையார் திருமயிலைக்கு எழுந்தருளினார். சிவநேசருடைய மகளது என்பு நிறைந்த குடத்தினைக் கபாலீச்சரத்து இறைவன் திருமுன்னர் வைக்கும்படி செய்து 'மட்டிட்ட புன்னையங்காணல்' எனத்தொடங்குந் திருப்பதிகத்தை ஞானசம்பந்தர் பாடிய பொழுது,