பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ii


திருவருட்பா, ஓதுவதற்கும், நுகர்வதற்கும் எளியது, இனியது, நல்லது. கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பு அளிக்கும் தீஞ்சுவைத் தெளிநீர்; தெவிட்டாத தேன்; இறையுணர்வுக்கு அமுது; கவிதை ஊற்று; வற்றாத கருத்து வழங்கும் அமுதசுரபி.

வள்ளலார் செய்த புரட்சிகள் பல. மறு மலர்ச்சியின் ஊற்றுக் கண்ணாய் வள்ளலார் வாழ்பவர். அவருடைய கனவுகள் இன்று நனவாகி வருகின்றன. அவரை இன்று உலகம் உணர்ந்து பாராட்டத் தொடங்கியுள்ளது. வள்ளலார் கொள்கைளை நம்புவோர் பலர், பின்பற்றுவோர் பலர், பரப்புவோர் பலர், தங்களை அர்ப்பணித்துக் கொண்டோர்கள் பலர். தொண்டர் பல்லாயிரவர்கள் கூடி வள்ளலார்க்கு இயக்கம் அமைத்துள்ளனர். கொள்கை, கொடி, கோஷம், சங்கம், சபை, சாலை அமைப்புடைய வள்ளலார் இயக்கம் இன்று வீடு தோறும் சோதி வழிபாடாய்ச் சுடர் வீசுகின்றது.

வீதிதோறும், ஊர் தோறும், நகர் தோறும், நாடு தோறும், வள்ளலார் வழிபடப்பெறுகிறார். கங்கையைப் போல், காவிரியைப்போல், ஊற்று எடுக்கும் அவர் கருத்துக்கள் பட்டி, தொட்டிகளிலும் பாரெங்கும் பரவுகின்றன.

வள்ளலார் இயக்கம், நிலம் முழுவதும் வேர்விட நீர் விடுவோர் பலர். இத்தொண்டர் கூட்டத்தில் மணிவாசகர் பதிப்பகத்தார் நன்னீர் பாய்ச்சி வள்ளலார் கருத்துக் கதிர்கள் வையகம் முழுவதும் பரவ வழிவகை செய்து வருகின்றனர்.

வடலூர் சபையில் சாலையில் உள்ள கல்வெட்டுப் பாடல்களை மிகச் சிறந்த செம்பதிப்பாகப் பதிப்பித்து