பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

 யினையுடைய நீலமயிலின்மேல் அமர்ந்து தோன்றினாற் போலுந் தெய்வத் தோற்றத்தினைப் புலப்படுத்தி நிற்றலின், வைகறை விடியலில் மலர்தலை யுலகின் மாயிருள் நீங்கத் தோன்றும் பலர் புகழ் செஞ்ஞாயிறே மைவரை யுலகின் தெய்வமாகிய சேயோனாகவும், கதிரவனுக்குக் கீழே தோன்றும் நீல நிறக் கடலே சேயோனது ஊர்தியாகிய மயிலாகவும் கருதிக் காலைக் கதிரவனைச் சேயோனாக எண்ணிப் போற்றுதல் தமிழ் நாட்டார் மரபாயிற்று, சேயோனாகிய முருகப் பெருமான் வைகறைப் பொழுதிலே மாயிருள் நீங்கத் தோன்றும் இளஞாயிற்றின் தோற்றமுடையவனாகத் திருமுருகாற்றுப் படையிற் போற்றப் பெற்றுள்ளமை அம் முதல்வன் என்றும் இளையோனாக உலக வாழ்க்கையில் ஈடுபடும் மக்கட் குலத்தார்க்கு மெய்யுணர்வென்னும் வேற்படையினால் அச்சம் அகற்றி, அறிவும் ஆண்மையும் நல்கி அவர்தம் வாழ்வில் முன்னியது முடித்தருளும் பெற்றியனாகப் போற்றப் பெறும் செந்தமிழ்க் கடவுளாகத் திகழ்கிறான்.

இனி, கதிர்சாயும் காலமாகிய மாலை வேளையில் மேற்கே காணப்படும் கதிரவனே, தன் செவ்வொளி தோய்ந்த முகிற்குழாங்கள் வானமுகட்டின் நாற்புறத்தும் செக்கர்ச் சடையெனச் சிவந்து மிளிர, அம்முகிற் குழாங்களின் இடையே தோன்றும் வெண்பிறையானது, அவிர் சடைக் கற்றைமேல் நிவந்து தோன்றும் வெண்பிறை என விளங்காநிற்கச் சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மானை மனம் கொள்ளச் செய்யும் தெய்வத் தோற்றம் உடையனாகத் திகழ்தலின் செவ்வானன்ன மேனியன் சிவன் எனவே வைத்து வழிபடப் பெறுவானாயினன். இவ் வுண்மை,