பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


'அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்க னாவான் அரனுரு வல்லனோ”

(5-100-8)

என வரும் அப்பர் அருள்மொழியினால் நன்கு புலனாதல் காணலாம்.

காலையில் தோன்று இளஞாயிறு, இருளிற் றுயிலும் மன்னுயிர்களைத் தன் ஒளிக் கதிர்களால் இருள் நீக்கி எழுப்பிப் பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தி வாழ்க்கையில் அச்சம் அகற்றி, வெற்றி நல்கி வையத்து வாழ் வாங்கு வாழுதற்கு உதவுமாறு போலவே, என்றும் இளையோனாகிய சேயோனும் மக்கட்குலத்தார் குற்றமற்ற கோட்பாடுகளால் தாம் தாம் மேற்கொண்ட தொழில்களை வெற்றி பெற முடித்து வையத்து வாழ்வாங்கு வாழும் வண்ணம் அவர்தம் மனத்தகத்தே இளஞாயிறாகத் தோன்றி அவர்தம் அறியாமை இருளை நீக்கி, அச்சம் தவிர்த்து அவர்கள் உள்ளத்தே எண்ணிய அனைத்தையும் இனிதே முடித்தருளுகின்றான் எனச்செந்தமிழ்ப் பனுவல்கள் போற்றுகின்றன. ஆதலால் காலைக் கதிரவனது தோற்றம் முன்னியது முடித்து அருளும் முருகப் பெருமானது தோற்றப் பொலிவிற்கு உவமையாயிற்று. பகலெல்லாம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உழைத்து இளைத்த மக்கட் குலத்தார் தமது உடல் இளைப்பும் உள்ளக் கவலையும் நீங்கி ஒய்வுபெறும் நிலையில் மாலைப் பொழுதில் ஞாயிற்றின் தோற்றம் அமைதி வழங்குமாறு போன்று, உலக வாழ்க்கையில் பலப்பல பிறவிகளை எடுத்து அல்லல் உற்ற மாந்தர் ‘எம்பெருமானே எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தோம்; எங்களது பிறவிப் பிணிப் பகற்றிப் பிறவா நெறியினை அளித்து அருள்வாயாக’ என ஐம்பொறிகளை அடக்கிய செம்புலச் செல்வர்களாய்