பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv


புலத்தால் திருவருட்பா ஆராய்ச்சியினை மிகச் சிறப்பாக இந்நூலில் செய்துள்ளார்கள். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இயற்புல ஆய்வுமூலம் தொல் காப்பியப் பொருளதிகாரத்திற்குப் புலமை நலம் தோன்ற உரை வளம் கண்ட மதுகையாளர்.

திருமுறை வரலாறு என்னும் பெருநூலை அளித்த திருமுறைக்கலைஞர்-திருமுறைக்காவலர் தமிழ் இலக்கிய வரலாற்றில் திருமுறை வரலாற்றுக்குத் தனிச்சிறப்பிட முண்டு. திருமுறை வரலாறு தீந்தமிழ் ஏடு. சைவத்திரு மனைகளில் சிவஒளி பரப்பும் சுடர்விளக்கு.

ஆய்வுலகில் ஒளிபரப்பும் ஞாயிறு அந்நூல். பல நூல்களுக்கு இன்று மூல நூலாய் விளங்குகிறது. கருத்துச் சுரங்கமாய், வரலாற்றுப் பேழையாய, திருமுறை வளம் காட்டும் கண்ணாடியாய் விளங்குகிறது,

போதக ஆசிரியராய், நூலாசிரியராய், உரையாசிரியராய் என முத்திறங்களில் சிறந்து விளங்கும் சான்றோர், சித்தம் அழகியார் ஆகிய வாரணனார் நூல்கள் தமிழ்நெறி விளக்கங்களாக அமைவன. தமிழுக்கு அவை அணிகலன்கள் மட்டுமல்ல, படைக்கலன்கள்.

தவத்திரு விபுலாநந்தர் யாழ்நூல் உருவாவதற்கு உறுதுணையாயிருந்தவர்; மறுபதிப்பு வெளி வருவதற்கு மூலகாரணமாயிருந்த தமிழிசைவல்லுனர்; பேரும் புகழும் பெற்ற பேராசிரியர். எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி, எங்கள் பதிப்பக வெள்ளி விழாவுக்காகத் 'திருவருட்பாச் சிந்தனை' எனும் சிறந்த நூலை முதுமையையும் கருதாது இயற்றி வழங்கியுள்ளார்கள். இந்நூல் அவரது முதிய அறிவின் விளைச்சல்,

இந்நூல் முயற்சி ஒர் அரிய முயற்சி; பெரிய முயற்சி; நன்முயற்சி.