பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

வந்திலாதவர் இல்லை யான் அவர்
தாயராகியும் தந்தைய ராகியும்
வந்திராததும் இல்லை முந்து
பிறவா நிலமும் இல்லை அவ்வயின்
இறவா நிலமும் இல்லை

(11 ஆம் திருமுறை-திருக்கழுமலமும்மணிக். 7)

எனத் திருவெண்காட்டடிகள் விரித்துக் கூறியுள்ளார். இங்கெடுத்துக் காட்டிய பாடற் பகுதி 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனவரும் புறநானூற்று அடிக்குரிய உரைவிளக்கமாக அமைந்துள்ளமை காணலாம். உயிர்களுக்கு மறுபிறப்பு உண்டு என்னும் கொள்கையை உடன்பட்ட புத்த சமண சமையத்தாரும், இருவினைப் பயனால் இறந்தவுயிர் மீளவும் பிறக்குங்கால் வெவ்வேறு இடங்களிற் சென்று பிறக்கும் எனவும், அவ்வுயிரிடத்தே அன்பு செலுத்துவோர் அஃது எங்கே பிறந்தது என்று அறியமுடியாமையால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல் வேண்டும் எனவும் கூறுவர். சோழ இளவரசனாகிய உதயகுமரன் என்பான், மாதவியின் மகள் மணிமேகலையை விரும்பி அவளைப் பின் தொடர்ந்து செல்லும் போது, துறவியாகிய அவள் காயசண்டிகை என்ற பெண்ணின் வடிவமுடையவளாக உருமாறினாள். காயசண்டிகையின் கணவனாகிய வித்தியாதரன் அவள் மணிமேகலை என்பதை அறியாமல் தன் மனைவி காயசண்டிகையே என எண்ணி அவளைத் தொடர்ந்து வந்த உதயகுமரனை வாளால் வெட்டி வீழ்த்தினான். அதனைக் கேட்ட சோழ மன்னன் தன் மகன் இறந்ததற்குச் சிறிதும் வருந்தாமல், மணிமேகலையைச் சிறையில் வைத்தான். தன் புதல்வனை இழந்த அரசமாதேவி தன்மகன் இறந்ததற்குக் காரணமாயிருந்த மணிமேகலையை இனி