பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே,
உடம்போ டுயிருடை நட்பு.

இ-ள்:- குடம்பை தனித்து ஒழிய புள் பறந்தால் அற்று-கூடு தனியே கிடக்கப் புள்ளுப் பறந்து போனாற் போலும், உடம்போடு உயிர் உடை நட்பு -உடம்போடு உயிர் கொண்டுள்ள நட்பு.

[ஏகாரம் அசை. நட்பு என்பது நட்பின் விடுகையை உணர்த்தி நின்றது. உடைய என்பது ஈறு கெட்டு நின்றது.]

மேல், உயிர் நிலைநிற்றற்கு ஒருபொழுதென்று காலம் கூறினார். இஃது, உயிர் நினைத்த பொழுது போ மென்றது. ௩௩௮.

றங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

இ-ள்:- உறங்குவது போலும் சாக்காடு-உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு; உறங்கி விழிப்பது போலும் பிறப்பு-உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு.

இது, போன உயிர் மீண்டும் பிறக்குமென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறி வருமென்பதூஉம் கூறிற்று. ௩௩௯.

புக்கில் அமைந்தின்று கொல்லோ, உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

இ-ள்:- உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு-(தனதல்லாத) உடம்பினுள்ளே ஒதுக்குக் குடியாக இருந்த உயிர்க்கு, புக்கில் அமைந்தது இன்றோ-போயிருக்க இடம் அமைந்ததில்லையோ? (அமைந்த)தாயின் இதனுள் இராதென்றவாறு. [கொல் என்பது அசை.]

இது, மேற்கூறியவாற்றான் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓர் இடத்தே தவறுமென்பது கூறிற்று. [தவறுதலாவது, பிறவி தவறுதல்; அஃதாவது, வீடு பெறுதல்.] ௩௪0.

௧௨௩