பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீவினையச்சம்

னைப்பகை உற்றாரும் உய்வர்; வினைப்பகை
வீயாது பின்சென் றடும்.

இ-ள்:- எனைப்பகை உற்றாரும் உய்வர்-எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தி உண்டாம்; வினைப்பகை வீயாது பின்சென்று அடும்-தீவினையாகிய பகை நீங்காது (என்றும்) புக்குழிப் புகுந்து கொல்லும்.

அஃதாமாறு பின்பே கூறப்படும். [உய்தி - பிழைத்தல்.]

இது, தீவினையானது (தன்னைச் செய்தானைப்) பின்சென்று அடுமென்றது. ௨0௨.

தீவினை செய்தார் கெடுதல், நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று.

இ-ள்:- தீவினை செய்தார் கெடுதல்-தீயவானவற்றைப் (பிறர்க்குச்) செய்தார் கெடுதல், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தால் அற்று-தன் நிழல் தன்னை நீங்காதே தன் அடியின் கீழ் ஒதுங்கினாற் போலும்.

இது, தீவினை அடுமாறு காட்டிற்று. ௨0௩.

றந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

இ-ள்:- மறந்தும் பிறன் கேடு சூழற்க-ஒருவன் மறந்தும் பிறனுக்குக் கேட்டைச் சூழாதொழிக; சூழின்-சூழ்வானாயின், சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்-(அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன் முன்னே) சூழ்ந்தவனுக்குக் கேட்டை(த் தீமைசெய்தார்க்குத் தீமை பயக்கும்) அறந்தானே சூழும். [சூழ்தல்-நினைத்தல்.]

இது, தீமையை நினைப்பினும் அது கேடு தரு மென்றது. ௨0௪.

௭௩

10