புகழுடைமை
இ-ள் :- ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்-பெரியாரது பெருமையாவது பசியைப் பொறுத்தல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்-(அதுவும் பெரிதாவது) பிறர் பசியைத் தீர்ப்பாரது பெருமைக்குப் பின்பு.
இது, தவம் பண்ணுவாரினும் தானம் பண்ணுவார் வலியுடைய ரென்றது. ௨௩0.
௨௪-வது.-புகழுடைமை.
அஃதாவது, புகழ்பட வாழ்தல். [புகழ், வள்ளியோரால் செய்யப்படுவதொன் றாதலின், இவ்வதிகாரம் செல்வரால் செய்யப்படும் ஈகையின்பின் கூறப்பட்டது.]
தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
இ-ள்:- தோன்றின் புகழொடு தோன்றுக-பிறக்கின் புகழ் உண்டாகப் பிறக்க; அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று-புகழ் இல்லார் பிறத்தலின் பிறவாமை நன்று.
இது, புகழ்பட வாழவேண்டு மென்றது. ௨௩௧.
ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு.
இ-ள்:- இசைபட வாழ்தல் ஈதல்-புகழ்பட வாழ்தலாவது கொடுத்தலே; அது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை-கொடையான் அல்லது உயிர்க்கு இலாபம் (வேறொன்று) இல்லை.
இது, புகழ் உண்டாம் ஆறு கூறிற்று. ௨௩௨.
உரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்.
௮௩