உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாசகத்தேன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 49

சமுதாயத்தினிடமிருந்தும் மற்ற உயிர்க் குலங்களிடமிருந்தும் நிறையப் பெறுகிறார்கள். ஆனால் மிகமிகக் குறைவாகவே திருப்பித் தருகிறார்கள். சிலர், திருப்பித் தருவதே இல்லை. அதனாலேயே மழை குறைகிறது; மண் வளம் கெடுகிறது; மாடுகள் இளைத்துச் சாகின்றன. இது இயற்கைக்குப் பொருந்தா, வாழ்க்கை. நாம் எவ்வளவு பெறுகிறோமோ அவ்வளவு திருப்பித்தர வேண்டும். இதுவே மத அறநெறி; திருவாசக நெறி. 'தந்தது உன்றன்னை' என்றதால் திருப்பெருந்துறையுறை சிவனின் எளிவந்த கருணையும் மாணிக்கவாசகர் ஆன்மாவின் வளர்ச்சியும் புலப்படுகிறது.

மாணிக்கவாசகர் அமைச்சுப் பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர்தம் சிந்தையில் திருப்பெருந்துறையுறை, சிவன் குடிகொண்டான். அதுமட்டுமா? எத்தனை எத்தனையோ திருக்கோயில்கள் இருக்க, திருப்பெருந்துறையுறை சிவன் மாணிக்கவாசகரின் உடலையே. இடமாக-திருக்கோயிலாகக் கொண்டு எழுத்தருளினான். இது என்ன வியப்பு! எண்ணற்ற கற்கோயில்கள் உள்ளன! இவ்வளவு திருக்கோயில்களையும் விட்டு விட்டு மாணிக்கவாசகரின் உடலைத் திருக்கோயிலாகக் கொள்வானேன்?

இறைவனுக்கு உவப்பானவை கற்கோயில்கள் அல்ல; உடற்கோயிலே, மனக்கோயிலே; இறைவன் கற்கோயில்களில் எழுந்தருள்வது முதல்நிலை! அங்குவரும் மனிதர்களைச் "சந்தித்து உறவாடிப் பக்குவப்படுத்தி அவர்தம் உடற்கோயிலில் புகுந்து தங்கி அருள்வான்! காஞ்சிபுரத்து பல்லவ மன்னன் காடவர் கோமான் கட்டிய கற்றளியில் எழுந்தருள்வதைவிட, பூசலார் நாயனார் பொன்னுடலில் கட்டிய மனக்கோயிலில் எழுந்தருள்வதை முன்னுரிமை யாகக் கொண்டனன் என்ற" வரலாறு உணர்த்தும் உண்மை என்ன? இறைவனு க்கு மனக்கோயிலே உவப்பானது என்பதுதானே.தி- 4.