பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 205


அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அவன் பெயரைச் சொல்லும்பொழுது உன் உள்ளத்தில் நிறைந்திருந்த அன்பு காரணமாக வாயில் எச்சில் ஊறிற்று. எனவே, நேற்று நீ பேசியது உள்ளன்போடு பேசியதுதான் என்பதை உன் வாயில் அள்ளுறியதால் அறிகின்றோம். ஆகவே, உன்னைக் குறைத்து மதிப்பிட நாங்கள் தயாராக இல்லை. இப்பொழுது வந்து உன் வாயிலைத் திறப்பாயாக’ என்றார்கள்.

‘முத்து அன்ன வெண் நகை’ என்று கூறியதால் உள்ளிருப்பவளின் அகமும் புறமும் தூய்மையாக உள்ளன என்பதை அவர்கள் குறிப்பால் சுட்டினாராயிற்று. ஆழ்ந்து சிந்திக்கும்போது இப்பொருள் தென்படுமேனும் மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர்கள். எள்ளி நகையாடியதாகவே இந்தத் தொடருக்குப் பொருள் கொள்ளமுடியும். 'முத்தன்ன வெண்ணகை' என் தூய்மையில்லை; பல் மட்டும்தான் வெண்மை உடையதாக உள்ளது என்ற எள்ளற்பொருளையும் தந்து நிற்கும்.

புறத்தே நின்றவர்கள் பேசியதைக் கேட்டு, உள்ளே இருந்தவள், அவர்கள் சொற்களுக்கு மேலோட்டமாகப் பொருள் செய்துகொண்டு, தன்னை அவர்கள் எள்ளி நகையாடியதாகக் கருதி, சற்று மனம் வருந்தினாள் என்றும் தெரிகிறது. அதனால் 'இறைவன்மாட்டுப் பற்று மிகுதியாக உடையவர்களே! பரம்பரையாகப் பழமையாக அடியார்களாக உள்ளவர்களே! உங்களைப் போல ஆழமான அன்பு என்மாட்டு இல்லையாயினும் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள். புது அடியாராக வந்துள்ள என் குற்றங் குறைகளைப் போக்கி உங்கள் பழ அடியார் கூட்டத்தில் சேர்த்துக்கொண்டால் என்ன இழுக்கு நேர்ந்துவிடப் போகிறது’ என்ற கருத்தில் அவள் பேசினாள்.