பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222 • திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


என்றும், சொன்ன பரிசே உகந்து பணிசெய்வோம் என்றும் இரண்டு இடங்களிலும் கூட்டிப் பொருள் செய்வது நலம். அடியார்களாகிய தமக்கு இறையடிமை பூண்ட ஒருத்தியே மனைவியாகக் கிடைத்துள்ளமையின், அவளிடம் எதைக் கூறினாலும் மன மகிழ்ச்சியோடு கூறுகிறார்கள் என்பதை உகந்து சொன்ன பரிசு என்பதற்குப் பொருளாகக் கொள்ளலாம்.

ஒருவர் தம் விருப்பத்தை எவ்வாறு கூறினாலும், மனைவியாக இருப்பவள் அதனைச் செய்யும் கடப்பாடுடையவள் என்பது, இந்நாட்டில் ஒரு காலத்தில் இருந்த கொள்கையாகும். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தல் என்பது இந்தக் கொள்கையாளரின் அடிப்படைத் தத்துவம். இந்த அடிப்படையை மாற்றிப் புதிய முறையில் பேசுகிறார்கள் இப்பாடலில் வரும் பெண் அடியார்கள். உகந்து பணி செய்வோம் என்று அமைத்துக்கொண்டால் இப்புதிய பொருள் கிட்டும். அதாவது, அடியார்களாகிய கணவன்மார்கள் எந்தக் கட்டளை இட்டாலும் மனம் ஒப்பி மிக்க மகிழ்ச்சியோடு அப்பணியை நிறைவேற்றுவோம் என்றால், கணவன்மாரிடத்து உள்ள நம்பிக்கையும், அவர்கள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் இம்மகளிருக்கு இருந்த மகிழ்ச்சியும் இதனால் பேசப்பெற்றன.

மனித மனத்தின் இயல்பு வினோதமானது. 'அரிது பெற்றிடினும் பெற்றதில் விருப்பம் அறப் பெறாதன விரும்பும் உயிர்கள்' என்றார் ஒரு பெரியவர். குறை இல்லாத மனம் இவ்வுலகில் இல்லை. அப்படியிருக்க இந்தச்சீர் அடியார்களாகிய பெண்கள், அடியிார்களாகிய கணவன்மார்கள் தங்களுக்குக் கிடைத்துவிட்டால் எவ்விதக் குறையும் இலோம் என்று சொல்வது அவர்கள் மன