பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


என்னும் உணர்வு அம்மனத்தினுள் நிறைந்து, அது முதிர முதிர மனம் கனியும் என்றபடி.

இந்த அடிப்படைத் தத்துவம் திருவாதவூரருக்கு நன்கு தெரியுமல்லவா? பேரறிஞராகிய அவர், அன்பெனும் உணர்வை மனத்தினுள் செலுத்தி அதனைக் கனியவைத் திருக்கலாமே ஏன் அவ்வாறு செய்யவில்லை; அவர் பலமுறை முயன்றிருத்தல் வேண்டும். ஆயினும், அன்பெனும் உணர்வை மனத்துட் செலுத்த முடியவில்லை. இப்பொழுது திருப்பெருந்துறையில் குருநாதர் வடிவிலிருந்த ஒருவர், ஒரே விநாடியில் அதனைச் செய்து முடித்துவிட்டார். பல்லாண்டுகள் முயன்றும் தாம் செய்யமுடியாத ஒன்றை, ஒரே விநாடியில் குருநாதர் செய்துவிட்டார்; ஆதலின், அவரை 'வல்லாளன்’ என்கிறார் அடிகளார்.

நீண்ட காலம் தாம் செய்ய முடியாததை ஒரே விநாடியில் குருநாதர் செய்துவிட்டதால்மட்டும் அவர் வல்லாளன் ஆகிவிடவில்லை. மேலும் ஒரு காரியத்தைச் செய்ததனால்தான் அவர் வல்லாளன் ஆனார். கல்போன்ற மனத்தைப் பிசைந்து கனியாக்குதல் ஒரு மாபெரும் செயல்தான். ஆனாலும், அங்ஙனம் கனிந்த மனம் முழுப்பயனையும் தராது. இன்று கனிந்த பழம் என்று நாம் காணும் பல பழங்கள் பெரும் பகுதி இன்சுவையும், ஒரு சில பகுதிகள் சுவையின்றியும் இருத்தலைக் காண்கிறோம். கல்போன்ற மனத்தைப் பிசைந்து கனியாக்கியவன் மனத்தின் இயல்பை நன்கு அறிந்தவன். கனியாக்கிவிட்டாலும் மறுபடியும் அந்த மனம் திருவாதவூரரிடம்தானே இருக்கப் போகிறது? அப்படிப்பட்ட நிலை வரும்போது கனிவிக்கப்பட்ட இம்மனம், ஒரு சில இடங்களில் பழைய கல் தன்மைக்குப் போய்விடும் அல்லவா?

அவ்வாறு நிகழாமல் இருக்க 'வல்லாளன்’ ஒரு காரியம் செய்தான் என்கிறார் அடிகளார். அது என்ன?