பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


இதனை விளக்கும். அந்த ஒன்றைக் காண முற்பட்டவுடன் பல்வேறு நாம, ரூபம் உடைய இப்பொருள்கள் மறையத் தொடங்கும். இந்த வளர்ச்சியைத்தான் 'காட்டாதன எல்லாம் காட்டி' என்கிறார்.

காணாதன எல்லாம் காட்டி என்று சொல்லியிருக்கலாமே? 'காட்டாதன' என்று சொல்லியதன் காரணமென்ன? மாறுபாட்டில் ஒருமைப்பாட்டைக் காணும் இயல்பு நம்பால் இல்லை. தலைவனாகிய அவன் நம்முள் இருந்து நம்மை வளர்த்து, அவன் காட்டும் பொழுதுதான் இந்த ஒருமைப்பாட்டை அறிய முடியும். 'காட்டுவித்தால் யாரொருவர் காணாதாரே, காண்பார் ஆர் கண்ணுதலாய்! காட்டாக் காலே' (திருமுறை: 6-95-3) என்று நாவரசர் பெருமான் கூறியதும் இக்கருத்தை வலியுறுத்தும்.

அதாவது, தம் கல்வி அறிவாலும் அனுபவ அறிவாலும் இதுவரை உலகையும் பொருள்களையும் வாதவூரர் கண்டிருந்த முறை வேறு, திருவடி தீட்சைக்குப் பின் அந்தப் பழைய உலகையும் பொருள்களையும் மணிவாசகப் பெருமான் காணுகின்ற முறை வேறு. இப்போதுதான் அவன் காட்டினான். ஆதலால், (இதுவரையில்) 'காட்டாதன எல்லாம் காட்டி’ என்றார்.

‘சிவம் காட்டி' என்பது அடுத்து நிற்கும் தொடராகும். இங்கே சிவம் என்றது உருவம் கடந்து நிற்கின்ற அருவநிலைப் பொருளைக் குறிப்பதாகும். இப்பொழுது பாடலின் முறைவைப்பை நன்கு அறிந்துகொள்ள முடியும்.

நாம், ரூபங்களோடு கூடிய உலகைக் கண்டு, வேறுபாடு உடையது இவ்வுலகம் என்ற கருத்தில் வாழும் திருவாதவூரரை, இந்த நாம, ரூபங்களைக் கடந்து பொருள்களை காணுமாறு செய்தான் இறைவன். தம்முடைய கருவி, கரணங்களின் துணைகொண்டு