பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 295


கொண்டிருக்கும் ஒரு தொகுப்பினரையே குறிப்பதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் என்ன வேண்டினாரோ அதையேதான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய நாயன்மார்களும், பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தோன்றிய குமரகுருபரர் போன்ற பெருமக்களும் வேண்டினர். பரம்பரைக் கணக்கில் இவர்கள் ஒவ்வொருவரும் பழ அடியார்கள் என்பதை மறத்தலாகாது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய காரைக்கால் அம்மையார்க்கு எதனை வழங்கினானோ, அதனையே நாயன்மார்கள் முதலியோர்க்கும் குமரகுருபரர் போன்றோர்க்கும் வழங்கினானாதலால் ‘பண்டைப் பரிசே ஈந்தருளும்’ என்றார்.

அடியார்கள் அனைவர்க்கும் பண்டைப் பரிசே ஈந்தருளினான் என்றால், எதனை என்ற வினாத் தோன்றுமன்றே! வீடுபேற்றை என்று விடை கூறினாலும், அதனைப் பெற்றால் நமக்கு என்ன கிடைக்கும் என்று உசாவுவது மனிதமனம். அதற்கு விடை கூறுவார்போல ‘அந்தமிலா ஆனந்தம்' ஈந்தருளினான் என்கிறார்.

மகிழ்ச்சி, இன்பம் என்பவை குறையுடையன; நிலையில்லாதன; இவ்வுலகிடைக் கிடைப்பன. இக் குறைபாடுகள் எதுவும் இல்லாத, நிலைபேறுடைய ஒன்றை ‘அந்தமிலா ஆனந்தம்’ என்கிறார் அடிகளார்.

184.

விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை
மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானைத்
தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானைப்
பெண் ஆளும் பாகனைப் பேணு பெருந்துறையில்
கண் ஆர் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணாமலையானைப் பாடுதும் காண் அம்மானாய் 10