பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



மாண்பு-மாட்சிமைதரும் பொருள். கண் ஆர் கழல்-யாரும் தியானித்தற்கரிய திருவடி. கண்ணுதல்-எண்ணுதல்.

'வேதியன்’ என்ற சொல் உயர்ந்தவன் என்ற பொருளைத் தந்து நிற்கின்றது. மன்னர்க்கு மாண்பாகி நின்றான் என்பது கூர்ந்து நோக்கத்தக்கது. எவ்வளவு உயர்ந்தவன் என்று இலக்கியங்கள் கூறினாலும், மன்னன் என்பவனும் முக்குண வசத்தனாய மனிதன்தான். தனிப்பட்ட சாதாரண மனிதர்களுக்குக்கூட வேண்டப்படும் உயர் பண்புகள் ஒரோவழி ஒருவன்பால் இல்லையென்றாலும், அதனால் பெருந்தீங்கு விளைந்துவிடாது. அவனையும் அவனைச் சுற்றியுள்ள ஒரு சிலரையும் மட்டுமே தாக்கும். ஆனால், மன்னனாக இருக்கின்றவன் அனைத்து உயிர்களையும் காக்கின்ற பொறுப்பில் இருப்பவன், ஆதலால் அன்பு, கருணை, இரக்கம், பிறர் துயர்துடைக்கும் பண்பு, பிழை பொறுக்கும் இயல்பு ஆகிய கடவுட் பண்புகள் அவன்பால் இருந்தே தீரவேண்டும். அவை இல்வழி அந்நாடே பெருந்துயரில் மூழ்க நேரிடும். ஆகவேதான், மன்னர்க்குரிய இம்மாண்புகளை, இறைப் பண்புகளை உடையவனே இறைவன் என்றே குறிப்பிடுகின்றார். ‘மண்ணாளும் மன்னர்க்கும் மாண்பாகி நின்றானை’ என்பதன் பொருள் இதுவேயாகும்.

‘மக்கட்கு இறை என்று வைக்கப்படும்’ (குறள்:388) என்ற வள்ளுவர் வாய்மொழி இக்கருத்தையே வலியுறுத்தும். கருணை முதலிய இறைப் பண்புகள் நிறைந்த ஒருவனை இறைவன் என்றே மக்கள் போற்றுவர் என்ற குறட் கருத்தையே அடிகளார் 'மாண்பாகி நின்றானை’ என்ற தொடரில் பெறவைக்கிறார்.

தமிழை வளர்க்கின்ற பொறுப்பைச் சங்கங்கள் அமைத்ததன் மூலமாகப் பாண்டிநாடே நிறைவேற்றியது