பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 303



'என்னையும் தன் இன்னருளால் இப்பிறவி ஆட்கொண்டு இனிப் பிறவாமே காத்து என்பது அடுத்துள்ள தொடராகும். என்னையும் என்பதிலுள்ள உம்மை, நாயிற் கடையாகிய என்னையும் என்று பொருள் தந்து நிற்கின்றது.

மேலே கூறிய மால், அயன், இந்திரன் முதலிய மூவரும் பிறவிதோறும் தேடினர். அப்படிப்பட்ட அரும்பொருள் ஆன அவன் நாயேனாகிய என்னை இந்தப் பிறவியிலேயே ஆட்கொண்டான். அப்படியானால் பல பிறவியெடுத்தும் அந்த மூவருக்கும் கிட்டாத ஒருவன் தம்மை இப்பிறவியிலேயே ஆண்டான் என்றால் அவர்களிலும் தாம் மேம்பட்டவர் என்ற தவறான எண்ணம் தோன்றிவிடக் கூடாது என்பதற்காகவே தன் இன்னருளால்' என்றார்.

இப்பிறவியிலேயே தாம் காணுமாறு அவன் வெளிப்பட்டு நின்றமைக்கு ஒரே காரணம், அவன் இன்னருளே தவிர வேறில்லை என்கிறார்.

இப்பிறவியில் அவன் வெளிப்பட்டு நின்று அருள் செய்தமையின் இரண்டு பெரும் பயன்கள் கிட்டின.முதலாவது பயன் இந்த மானுட உடம்புடன் இருக்கும்பொழுதே முழுமையான இறையனுபவம் கிட்டியமை என்க. இது உடனடிப் பயனாகும். இரண்டாவதாக, நீண்ட காலப் பயன் ஒன்றும் உண்டு. அடுத்துவரும் பிறப்புக்களில் இருந்து விடுபட்டதே நீண்டகாலப் பயன் என்க. இதனையே 'இனிப்பிறவாமே காத்து’ என்றார். இறைவனைப் பல இடங்களிலும் தேன். என்று அடிகளார் கூறுவது உடனடிப் பயன், நீண்ட காலப் பயன் என்ற இரண்டும் தருவதுபற்றியே ஆகும்.

'மெய்ப் பொருட்கண் தோற்றம்’ என்பது சத்தியத்தில் தோன்றுபவன் என்ற பொருளைத் தருவதாகும். 'மெய்யே