பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 307


என்பதற்காக நாமறிந்த தேன், பால், கன்னல்போன்ற சுவைப்பொருட்களை உவமையாகக் காட்டியுள்ளார்.

அருளார் அமுதம் அனுபவிக்கும்போது பெருஞ்சுவையுடைதாய் இருந்தது. கோனாக வந்த அவர் இந்தச் சுவையைத் தந்ததுடன் தன் அடியார்கட்டத்திலும் ஒருவராகத் தம்மைச் சேர்த்துக்கொண்டார் என்கிறார்.

189.

சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள் நெரித்திட்டு எச்சன் தலை அரிந்து
அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்துச்
சிந்தித் திசை திசையே தேவர்களை ஓட்டு உகந்த
செம் தார்ப் பொழில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதும் காண் அம்மானாய் 15

அந்தரம்-ஆகாயம். சிந்தி-சிதறி. செந்தார்-சிவந்த மாலை.

இப்பாடலில் தக்கன் வேள்வியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் கூறப்பெற்றுள்ளன.

‘செந்தார்ப் பொழில் புடைசூழ் தென்னன்' என்றது சிவந்தும் நன்கு மலர்ந்தும் உள்ள மலர்கள் சூழ்ந்த பொழில்களோடு கூடிய தென்னாட்டின் தலைவன் என்கிறார். அவன், தேவருலகின் மலராகிய மந்தாரப் பூக்களால் தொடுக்கப்பெற்ற மாலையை அணிந்துள்ளான் என்றவாறு.

190.

ஊன் ஆய் உயிர் ஆய் உணர்வு ஆய் என்னுள் கலந்து
தேன் ஆய் அமுதமும் ஆய்த் தீம் கரும்பின் கட்டியும் ஆய்
வானோர் அறியா வழி எமக்குத்தந்தருளும்
தேன் ஆர் மலர்க் கொன்றைச் சேவகனார் சீர் ஒளி சேர்
ஆனா அறிவு ஆய் அளவு இறந்த பல் உயிர்க்கும்
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண் அம்மானாய் 16