பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



ஊன்-உடல். வானோரறியாவழி-பேரின்பவழி. ஆனா அறிவு- அமையாத பேரறிவு.

ஊன் வேறு உயிர் வேறு என்பது பலரும் அறிந்த ஒன்று. உயிருக்கு உயிராய் இறைவன் உள்ளான் என்றாலும் எல்லாவற்றிலும் அவன் கலந்து ஊடுருவி உள்ளான் என்பதால், ஊனினும் கலந்து உயிரிலும் ஊடுருவி உள்ளான் என்பது விளங்கும். எனவே 'ஊனாய், உயிராய்’ என்றார்.

கொன்றை மாலை அணிந்த சேவகன் 'வானோர் அறியா' வழி எமக்குக் காட்டினான் என்க.

எந்த வானவரும் அந்த நிலையிலிருந்து நேரே வீடுபேற்றை அடைய முடியாது. மீண்டுவந்து உலகிடைப் பிறந்து, பின்னரே உய்கதி அடைய வழிதேட வேண்டும். ஆனால், அடிகளாருக்குப் பிறவா நெறி அருளினானாதலால் 'வானோர் அறியா வழி எமக்கு தந்தருளும்’ என்றார்.

191.

சூடுவேன் பூம் கொன்றை சூடிச் சிவன் திரள் தோள்
கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று
ஊடுவேன் செவ் வாய்க்கு உருகுவேன் உள் உருகித்
தேடுவேன் தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன்
வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல் ஏந்தி
ஆடுவான் சேவடியே பாடுதும் காண் அம்மானாய் 17

முயங்கி-கலந்து. மயங்கி-இன்பமீதூர்ச்சியால் போகம் போதாதென்ற எண்ணம் பிறக்க மயங்கி.

இப்பாடலுக்கு தமிழ் அகத்திணை இலக்கண வழிபற்றி முழுவதுமாகப் பொருள் கூறுவர்.

ஆனால், இறைப்பிரேமை என்று முன்னர் நாம் குறித்துள்ளதை இங்கே நினைவுகூர்தல் நலம் பயக்கும்.