பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


இதே முறையைப் பின்பற்றி, பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் சிவபுரத்தில் சென்று தங்குவர் என்று அடிகளார் கூறியதைப் பார்த்தவுடன் ஆளுடைய பிள்ளையாரின் எனதுரை தனதுரை போல ஒரு பகுதி இந்தச் சிவபுராணத்தினுள் எங்கோ ஓரிடத்தில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். எந்த நிலையிலும், தாம் பாடிய பாட்டைப் பாடுபவர் இந்நிலை அடைவர் என்று அடிகளார் கூறியிருக்கமாட்டார். ஆதலின் 'உரைப்பன் யான்' என்பதற்குப் புதிய முறையில் பொருள் காணப்பெற்றது.

மனிதர்கள் பாடிய பாட்டை, ஏனையோர் பொருள் அறிந்து அல்லது பொருள் தெரிந்து மட்டுமே கூடப் பாட முடியும். ஆனால், இறைவனே கூறிய பாடல் ஆதலின் சொல்லிய பாட்டின் பொருள் தெரிந்து அல்லது அறிந்து என்று கூறாமல் 'பொருள் உணர்ந்து சொல்லுவார்’ என்று கூறப்பெற்றுள்ளது. இங்கு வரும் 'உணர்ந்து’ என்ற சொல்லே, மேலே உள்ள பாடற்பகுதி சிவனுரை ஆகும் என்பதை நுணுக்கமாகத் தெரிவிக்கிறது.

இவ்வாறு கூறியபிறகு, சிவபுராணத்தை அடிகளார் திருவாசகத்தின் முதல் பாடலாகப் பாடினார் என்று கூறுவது சரியாகத் தோன்றவில்லை. திருவாசக நூலில் இப்பகுதி முதற்பாடலாக இடம் பெற்றிருப்பினும் அடிகளாரின் வாழ்க்கையில் மிகப் பிற்காலத்தில் பாடப் பெற்றிருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. இங்கே ஓர் ஐயம் எழ இடமுண்டு. விருத்தப்பாக்களால் ஆகிய பகுதிகளைப் பாடிய பிறகு மறுபடியும் சிவபுராணத்தை அகவலில் பாட வேண்டிய சூழ்நிலை என்ன? இங்குக் கூறப்பெற்ற கருத்துக்களை விருத்தப்பாக்களில் கூறியிருக்க முடியாதா என்ற வினாத் தோன்றினால், விடை கூறல் ஓரளவு கடினமேயாகும். உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்தும் விருத்தப்-