பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 323


பாடல்களில் தலையாய இடம் பெறுவது உணர்ச்சிப் பெருக்கே தவிர, செய்திகள் அல்ல. செய்திகளை விரைவாக அடுத்தடுத்து அடுக்கிக்கொண்டே செல்லும் திறம் அகவலுக்கு உண்டே தவிர உணர்ச்சிப் பாடல்களுக்கு, விருத்தப் பாடல்களுக்கு இல்லை.

இறையனுபவத்தில் துளையமாடிய அடிகளார், கடைசிக் காலத்தில் ஒரு முடிவுரை போலவும், ஓரளவு உருக்கமாகவும், உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடாமலும், செய்திகளை அடுக்கிச் சொல்லும் முறையில் ஒரு பாடலைப் பாட நினைத்திருந்தார்போலும். மனித சமுதாயத்திற்கு ஒரே ஒரு பாடலை, அவர்கள் நம்பிக்கையை வளர்க்கும் முறையில், விட்டுச்செல்ல வேண்டும் என்று நினைத்த அடிகளார், இறைவனை நோக்கி 'என் கருத்து முடியும் வண்ணம் முன் நின்று’ (திருவாச:378) அருளவேண்டும் என்று பலமுறை வேண்டிக் கொண்டிருத்தல் வேண்டும். அதன் பயனாக, இறைவன் உயிர்கள்மாட்டுக் கொண்ட பரம கருணையினாலும் அடிகளார்மாட்டுக் கொண்ட கருணையினாலும் தானே அவருள் புகுந்து, சிவபுராணத்தை அருளிச் செய்தான் என்று நினைப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. ஒளிவடிவாக உள்ள இறைவன் தன் ஒலி சொரூபத்தை உயிர்கள் உணர்தல் நலம் என்று எண்ணினான் போலும், அதனாலேயே 'நமச்சிவாய’ என்று தொடங்கினான். சொல்லிய பாட்டின் பொருளை உணர்ந்து சொல்லும் பொழுது, அவர்களையும் அறியாமல் சொல்பவர்களின் மனத்தில் ஆணவம் புகுந்து விடும். அதனைப் போக்கவே பாடலை முடிக்கின்றபொழுது ‘பணிந்து’ என்ற சொல்லை இறுதியாக வைக்கின்றான். ஒலிவடிவினனாகிய இறைவனைப் பணிந்து வழிபட்டால் சிவபுரத்தினுள் புகமுடியும் என்பதே இப்பாடலின், திரண்ட கருத்தாகும்.