பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


பெயர்களில் இடம் பெற்றவை ஆகும். எனவே, அத்தலைப்பில் வரும் திருவாசகப் பாடல்களைப். படிக்கும்போது பழைய மரபுபற்றியே அப்பாடல்களுக்குப் பொருள் செய்துகொள்கிறோம்.

இருபது பாடல்களையும் படித்த பிறகுகூட அதில் ஏதேனும் புதுமை இருக்கிறதா என்று நாம் சிந்திப்பது இல்லை. பழைய , மரபை விட்டுவிட்டுப் பாடல்கள் முழுவதையும் ஒன்றாக வைத்து, இவற்றில் ஏதேனும் புதிய சிந்தனையை அருளாளராகிய அடிகளார் தருகிறாரா என்று சிந்திக்கத் தொடங்கினால், பல புதுமைகளைக் காணமுடியும். இதுபற்றி, திருவெம்பாவைக்கு எழுதப் பெற்ற பின்னுரையில் சற்று விரிவாகச் சிந்தித்து உள்ளோம். திருஅம்மானை முதலியவற்றிற்கும் அவ்வாறே.

மரபுபற்றிப் பாடப்பெறும் தனித்தனி வருணனைப் பாடல்களிற்கூடக் கவிஞர்கள் தத்தம் முத்திரையைப் பதிக்கின்றார்கள். அப்படியிருக்க அருளாளர்களில் தலைசிறந்த ஒருவராகிய அடிகளார் திருவெம்பாவை, திரு அம்மானை முதலியவற்றில் தம் முத்திரையைப் பதிக்காமல் இருந்திருக்கமாட்டார். இதுவரை நாம் செய்த தவறு, மரபு அடிப்படையில் இப்பாடல்களுக்குப் பொருள் செய்து அத்துடன் திருப்தி அடைந்துவிட்டமையே ஆகும்.

ஒரு தலைப்பில் வரும் அனைத்துப் பாடல்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கும்போது பல புதிய சிந்தனைகளை 'அவை' உள்ளடக்கி இருத்தலைக் காணலாம்.

திருச்சதகம்

நான்கு அகவல்களையும் அடுத்து இருப்பது திருச்சதகம் ஆகும். நூறு பாடல்கள் அமைந்திருத்தலின்