பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


ஏனைய பாத்திரங்கள் குருநாதருடன் சேர்ந்து வீடுபேற்றை எய்தியதுபோலத் தாமும் எய்தவேண்டும் என்று நினைத்தது ஒரு வேடிக்கை அல்லவா? எனவே, அந்த நிகழ்ச்சியில் நிகழ்ந்தவற்றைக் கூறும்பொழுது ‘மிகப்பெரிதும் விரைந்தேன்’ என்று கூறவந்த அடிகளார், அந்த விரைவில் உள்ள உறுதிப்பாட்டைக் கோடிட்டுக் காட்டுவதற்காக 'விரைகின்றேன்’ என்று நிகழ்காலத்தால் கூறினார். உரையாடலில் வருவேன் என்ற எதிர்காலச் சொல் பயன்படவேண்டிய நிலையில் விரைவும், உறுதியும் கருதி ‘வந்தேன்’ என்று இறந்த கால வாய்பாட்டில் வருகிறதல்லவா? அதேபோல இங்கு விரைந்தேன் என்ற இறந்தகாலச் சொல், உறுதி கருதி 'விரைகின்றேன்’ என்ற நிகழ்காலச் சொல்லாக மாறிவந்துள்ளது.

உறுதி கருதியே இறந்தகால வினைமுற்றுக்குப் பதிலாக நிகழ்கால வினைமுற்று வந்தது என்று கூறுவதற்குரிய காரணம் 16ஆம் பாடலில் விரிவாகப் பேசப்பெற்றுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி ஒருவர் விரைகின்றார் என்றால் அதன் பொருள் யாது? முன்னர் இருந்த இடத்தில் தொடர்ந்து இருக்க விருப்பமில்லை. புதிய இடத்திற்குச் செல்லவேண்டுமானால் உடனே செல்ல வேண்டும். நாளைச் செல்லலாம்; நாளைச் செல்லலாம் என்று காலங் கடத்தினால் நாளை என்பது வராமலும் போய்விடலாம் அல்லவா? எனவே, இருந்த இடத்தை விட்டுப் புதிய இடத்திற்கு விரைகின்ற நிலை ஏற்படுகின்றது. இருந்த இடத்தில் எவ்வளவு சுகங்கள் கிடைப்பினும் ஒருவர் அதனை உதறிவிட்டு மற்றொரு இடத்திற்கு விரைகின்றார் என்றால், அந்தப் புதிய இடத்தில் பழைய இடத்திலிருந்த சுகத்தைவிட அதிக சுகம் கிடைக்கும் என்ற உறுதிப்பாடு காரணமாகவே விரைகின்ற நிலை ஏற்படுகின்றது. 'வானேயும் பெறில் வேண்டேன்