பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 347


இங்கு மூன்று பாடல்களில் வரும் மூன்று தொடர்கள் சிந்திக்கத்தக்கன. பெருந்துறை அநுபவம் கைவிட்டுப் போனதுபோல இப்பொழுதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற அச்சத்தால் ‘புறமெனைப் போக்கல் கண்டாய்' (66) என்று பாடுகிறார்.

மறுபடியும் கிடைத்துள்ள இந்த அநுபவம், மறுபடியும் கைவிட்டுப் போய்விடாமல் இருக்கவேண்டுமே என்ற அச்சம் மனத்தில் தோன்றுகிறது. உடம்பு என்ற ஒன்று இருக்கின்றவரையில் அநுபவம் நிலையாக நில்லாது என்று அஞ்சிய அடிகளார், 'இங்கு இவ்வாழ்வு ஆற்றகில்லேன்' (69) என்றும் உடலிது களைந்திட்டு ஒல்லை உம்பர்தந் தருளு போற்றி (68) என்றும் பாடுகிறார்.

முந்தைய பாடல்களைப் போலவே அடுத்த பத்துப் பாடல்களும் (75-84) அநுபவப் பெருமையையும் அவற்றை விட்டுவிட நேர்ந்த இயல்பையும்பற்றியே பேசுகின்றன.

எழுபத்தாறாவது பாடல் தமக்கு என்ன வேண்டும் என்பதை அடிகளார் கூறுவதாக அமைந்துள்ளது. போகம், இன்பம் என்பவற்றை மனம் என்றும் நாடும் என்பதில் ஐயமில்லை. மகிழ்ச்சித் தரும் போகங்களில் இந்திரபோகம் மிக உயர்ந்தது என்பர். அந்த இந்திராதி போகமும் வேண்டிலேன் என்று முதலிரண்டு அடிகளில் அடிகளார் கூறுகிறார். அப்படியானால் அதற்குச் சமமானதாக அல்லது அதைவிட உயர்ந்ததான ஒன்றை அல்லவா கேட்க வேண்டும். ஆனால் அடிகளார் கேட்டது சற்று வித்தியாசமானதாகும்.

உடம்பு நைய, தலைமேல் கைகள் ஏற, கண்ணிர் ஆறாகப் பெருகவேண்டும். இவையே அடிகளார் வேண்டுவனவாகும். சற்று நின்று நிதானித்தால் இந்த வேண்டுதலின் சிறப்பை, ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியும். கைகள் தலைமேல் ஏறுவது, மனம் நைதல்,