பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 351


அது வேண்டும் என்று மேலும் வேண்டிப் பாடாமல், திடீரென்று புதிய திசையில் போகின்றார்.

சென்ற பத்துப் பாடல்களில் பலமுறை இத்தகைய அன்பு வேண்டும் என்று பாடியவர், திடீரென்று புதிய திசையில் போவதற்குரிய காரணம் என்ன?

ஒன்றைப் பல முறை வேண்டியும், அது கிட்டவில்லை என்றபொழுது இரண்டு வகையான காரணங்களைச் சிந்திக்கலாம். ஒன்று அதனைக் கொடுக்க வேண்டியவர் மனம் இரங்கவில்லை என்ற முடிவுக்கு வரலாம். இந்தக் காரணம் அடிகளாரைப் பொறுத்தமட்டில் பொருந்த வில்லை. வழியோடு போனவரை வலிதில் பற்றி இழுத்து ஆட்கொண்டு அனுபவத்தைத் தந்தவர், அடியார் கூட்டத்திடை இருக்கச் செய்தவர், தம்மாட்டு இரக்கம் கொள்ளவில்லை என்று நினைப்பதே தவறு.

அப்படியானால் இரண்டாவதாக உள்ள காரணத்தைச் சிந்திக்கலாம். என்ன காரணமாக இருக்கும்? இரக்கமுள்ளவரே, முன்னர் எளிதாகத் தந்தவரே இப்பொழுது தரவில்லை என்றால், அவர்மேல் குற்றம் இல்லை. எனவே, இரண்டாவது காரணத்தில் தம்மிடம் உள்ள குறை காரணமாகவே அவர் தரவில்லை என்ற முடிவுக்கு வருகிறார் அடிகளார். தம்மாட்டு உள்ள குற்றம் என்ன என்பதை நினைந்தவுடன், பொய் என்ற ஒன்று, விசுவரூபம் எடுத்து அடிகளாரின் முன்னே நிற்கின்றது. இந்தப் பத்துப் பாடல்களிலும், பின்னரும் பல பாடல் களிலும் பொய்யைத் தம் வாழ்க்கையோடு இணைத்துப் ‘பொய்யன்' என்று தம்மை அடிகளார் கூறிக்கொள்கிறார்.

இந்த ஆய்வின் முடிவில் அடிகளாருக்கு ஒர் உண்மை தெளிவாகின்றது. தாம் எவ்வளவு பொய்யராக இருப்பினும், தம்முடைய அன்பு எவ்வளவு பொய்யாக இருப்பினும், தம் பிழையை நினைந்து அழுதால் மறுபடியும் அவர்