பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 55


பெற்ற செயல்களைச் செய்யாமல் காலத்தை அவமே போக்குகின்றோமே' என்று நினைத்து வருந்துகிறது. அது இரண்டாம் நிலையில் நடைபெற்ற ஒவ்வொரு செயலையும் தனித்தனியே நினைத்து 'ஐயோ இது நடைபெறவில்லையே! இனி நாம் என்ன செய்யப் போகிறோம்?' என்று வருந்துகின்ற கழிவிரக்க நிலையே மூன்றாவது நிலை எனப்படும்.

இந்த மூன்றாவது நிலையிலெழுந்த பாடலாகும் மேலேயுள்ள பாடல்.

36.

அறிவு இலாத எனைப் புகுந்து ஆண்டுகொண்டு
      அறிவதை அருளி மேல்
நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையைப்
      பந்தனை அறுப்பானைப்
பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும்
      மாறு ஆடுதி பிண நெஞ்சே
கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய்
      என்னைக் கெடுமாறே 32


மேல்நெறி-வீட்டுநெறி. புலமாக்கிய-அறிவகத்தே விளங்கச் செய்த கிறி-பொய். மாறாடு-மாறுகொண்டு நிற்றல்.

இப்பாடலின் முதலடி இறைவன் திருவடி தீட்சையின் பயனால் நிகழ்ந்த இரண்டாவது செயலைக் குறிக்கிறது. திருவடி தீட்சையால் நடந்த முதற்செயல் அறிவை அழுத்தி அனுபவம் மேம்பட்டு நின்ற நிலை. அந்தத் திருவடி தீட்சை தந்த இரண்டாவது பயன் உண்மை அறிவை அருளியதாகும். அறிவிலாத ஒரு பொருளிடத்து அறிவைட் புகுத்தினால், அது பொய்யறிவாகவும் போய்விடலாம் அல்லவா? அவ்வாறில்லாமல் மெய்யறிவைப் புகுத்தியவர் எவ்வாறு அதனைச் செய்தார்? அறிவிலாத ஒருவரிடம் புகுந்து ஆண்டுகொண்டு, பின்னர் அறிவைப் புகட்டினார் ஆதலின், அது மெய்யறிவு ஆயிற்றென்க. இங்கேயும் புகுந்து