பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 63


போனபொழுது 'என்னைப்போல வினையுடையார் யார்’ என்று வருந்துகிறார் அடிகளார்.

ஒருவேளை அந்த அனுபவத்தைத் தந்தவனே அது வேண்டா என்று மீட்டும் எடுத்துக் கொண்டு விட்டானோ என்ற ஐயம் மனத்திடைத் தோன்றவே, மிக அழகாக அந்த ஐயம் தவறானது என்பதற்கு விளக்கம் கூறுகிறார் அடிகளார். 'உடையானை அடிநாயேன் ஒரு தினையளவு காலமும் பிரிந்திருக்கவேண்டும் என்று அவன் கருதவில்லை. கருதியிருப்பின் இதனைத் தந்தே இருக்க மாட்டான். எனவே, இப்பொழுது அனுபவம் என்னை விட்டு நீங்கிற்று என்றால், அதற்கு நானும் என் வினையுந்தான் காரணம். இப்படி ஒரு தீவினை உடையார் பிறர் யாரும் இல்லை' என்கிறார்.

பிரிந்தது அவன் திருக்குறிப்பன்று. தம்முடைய வினையே என்று தெரிந்தபின்னர், அந்த வினைக்குக் காரணமான இந்த உடம்பைக் கல்லில் மோதியிருக்க வேண்டும்; தலையைக் கீறிக்கொண்டிருக்க வேண்டும். இவற்றைச் செய்யாமைக்குக் காரணம் தம் உடல் இரும்பாலானது; மனம் கல்லால் ஆனது; தம்முடைய செவிகளை இன்னதென்றே தம்மால் சொல்ல முடியவில்லை என்கிறார். (பிறிவது - பிரிவது).

42.

ஏனை யாவரும் எய்திடல் உற்று மற்று
      இன்னதுஎன்று அறியாத
தேனை ஆன் நெயை கரும்பின் இன் தேறை
     சிவனைஎன் சிவலோகக்
கோனை மான் அன நோக்கிதன் கூறனை
     குறுகிலேன் நெடும் காலம்
ஊனை யான்இருந்து ஒம்புகின்றேன் கெடு
     வேன் உயிர் ஓயாதே 38