பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 81


காரணம், நான் மெய்யனாக இருந்திருப்பின் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்திருக்கும். எனவே, 'செய்வதறியாச் சிறு நாயேன்' என்றார்.

அப்படியானால், தம் உண்மைநிலை என்ன? தமக்குக் கிடைத்த பேறு தம் தகுதியால் வந்தது அன்று என்பார், ‘பொய்யர் பெறும் அத்தனையும் பெறுதற்கு உரியேன்' என்றார்.

உலகியலில் சராசரி மனிதர்கூட, இன்றியமையாத ஒன்றைக் கண்டாலும் அல்லது கேட்டாலும் அதை மனத்திற் கொண்டு அதன்வழி நிற்க முயல்வர். மெய்யன்பு உடையவர்கள், மனம் பொருந்திய மலர்போன்ற திருவடிகளை அடைவதைக் கண்டும், கேட்டும் உள்ளேன். அப்படியானால், சராசரி மனிதனாக நான் இருந்தாற்கூட அம்மெய்யரின் முன்னேற்றத்திற்குக் காரணம் அவர்கள் மெய்யன்பே என்பதை அறிந்திருப்பேன். அதன் பயனாக என் பொய்யன்பை மாற்றிக்கொண்டு நானும் மெய்யனாக மாறியிருக்க வேண்டும். அதனைச் செய்யாமல் உண்டு உடுத்திப் பொறி, புலன்களுக்கு இடமான இந்த உடம்பினை ஓம்பி இங்கு வாழ்கின்றேன்’ என்கிறார். ஏறு போன்ற பெருமானே! உடம்பினை ஓம்பும் இந் நிலையிலிருந்து மாறுவதற்கு நீயே அருள் செய்ய வேண்டும் என்பது குறிப்பெச்சம்.

57.

போர் ஏறே நின் பொன் நகர்வாய்
       நீ பேந்தருளி இருள் நீக்கி
வார் ஏறு இள மென் முலையாளோடு
       உடன் வந்தருள அருள் பெற்ற
சீர் ஏறு அடியார் நின் பாதம்
       சேரக் கண்டும் கண் கெட்ட
ஊர் ஏறு ஆய் இங்கு உழல்வேனோ
       கொடியேன் உயிர்தான் உலவாதே 53

ஊரேறு-ஆள்வாரில்லாத ஊர்க்காளை. உலவாதே-நீங்காதே.