பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சாழல் 19 வியப்பைத் தோழிக்குச் சொல்வது போன்று அமைந்துள்ளது பாடல். 'தான் அந்தம் இல்லான்’ என்பது தனக்கென்று ஒரு தொடக்கமும் முடிவும் இல்லாதவன் என்ற பொருளையுடையது. இதன் மூலம் அவன் பெருமை கூறியவாறாயிற்று. இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருள்களும் ஒரு நாள் தோன்றி, சில காலம் இருந்து, ஒரு நாள் முடிவை அடைகின்றன. இதுதான் நியதி என்பதை அறிந்த மனத்திற்கு இதன் மறுதலையாகத் தோற்றமும் முடிவும் இல்லாத ஒருவன் உள்ளான் என்பது வியப்பையும் மலைப்பையும் தருகிறது. அந்த வியப்புப் தோன்றியவுடன் அவனெங்கே, நானெங்கே என்ற அச்சம் தோன்றிவிடுகிறது. இவ்வாறு அஞ்சுகின்ற மனத்திற்கு ஒரு அமைதி தருகிறார் அடிகளார். 'அந்தமில்லாத அவன், நாயேனாகிய என்னை அழைத்துத் தலையளி செய்து ஆனந்த வெள்ளத்து அழுந்துமாறு செய்தான் இங்குக் காணேடி என்பது மிகுந்த அதிசயத்தை நீ பார்த்தாயல்லவா என்ற பொருளைத் தந்து நிற்கிறது. நாயேன் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளுகின்ற ஒருவருக்கு இத்துணைப் பெரிய நன்மையைச் செய்தான் ஒருவன் என்று கேட்டவுடன், செய்தவனது பெருமையைக் குறைத்து மதிப்பிடும் ஒரு சூழ்நிலை தோன்றிவிடும். அதனைத் தடுக்கப் பின்னிரண்டு அடிகள் உதவுகின்றன. ‘என்னை ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்த திருவடிகள் சாதாரணமானவை என்று எண்ணிவிடாதே, 'வலவன் ஏவா வான ஊர்தியில் அமர்ந்த ஆகாயத்தைத் சுற்றித் திரியும் தேவர்களுக்கும் அத்திருவடிகள் காணக் கிட்டாத பொருளாகும்’ என்பதை உணர்வாயாக' என்றவாறு. s