பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. திருப்பூவல்லி |மாயாவிசய நீங்குதல்) அடிகளாரின் ஈடு இணையற்ற திருவாசகம் என்ற அமுதக் கடலில் பல பாடல்கள் சிறுமியரை நோக்கியே பாடப்பெற்றுள்ளனவாகும். இதுபற்றி முன்னரே சற்று விளக்கமாகக் கூறப்பெற்றுள்ளது. பூப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல் என்ற பல சொற்கள் பழக்கத்தில் இருப்பினும், ஒவ்வொன்றும் ஒரு தனிப்பொருளைப் பெற்றுள்ளது. ரோஜா முதலிய செடிகளில் பூக்கும் பூவை எடுப்பதைப் பூப் பறித்தல் என்று கூறுவர். தரையில் படர்ந்திருக்கும் கொடிகளில் உள்ள பூவை எடுப்பதனைப் பூக் கிள்ளுதல் என்று கூறுவர். மரம், பந்தல் ஆகியவற்றில் உயர்ந்து படர்ந்திருக்கும் கொடிகளில் உள்ள பூவை எடுப்பதைப் பூக் கொய்தல் என்று கூறுவர். அடிகளார் பாடும் பூவல்லி கொய்யாமோ என்ற தொடர், கொடியில் (வல்லியில்) உள்ள பூவைக் கொய்தலையே குறிப்பதாகும். - சிறுமியர் எதிர்எதிராக நின்றுகொண்டு, உடம்பை எக்கி, மேலேயுள்ள கற்பனைப் பூவைப் பறிப்பதுபோன்ற பாவனை-விளையாட்டில் ஈடுபடுவதையே இங்கு அடிகளார் பாடுகின்றார்.