பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தோணோக்கம் 175 பொருள்பற்றிச் செய்கின்ற பூசனைகள் என்பது ஆகம விதிக்கு உட்பட்டுத் து.ாய்மையான பாத்திரங்கள், அபிஷேகப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், மலர்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு செய்யப்படுகின்ற பூசனையே ஆகும். இந்த ஆகம பூசையில் ஏற்றுக்கொள்ளப்படாமல் விலக்கப்பட்டனவும், அநுசிதம் என்று சொல்லப்பட்டனவும், ஆகிய பொருள்களையே கொண்டு திண்ணனார் பூசனைச் செய்தார். அவர் செய்த பூசனைகளைக் கூறவந்த அடிகளார் பின்வருமாறு கூறுகிறார்: இறைவன் திருமேனியில் செருப்புற்ற சீர் அடி, வாயைக் கலசமாகக் கொண்டு நிரப்பிய அபிடேக தீர்த்தம், மான், பன்றி இவற்றின் இறைச்சியாலான நிவேதனம் ஆகியவை திண்ணனார் பூசனையாம். இவற்றுடன் அவர் நிற்கவில்லை. வாயில் கொணர்ந்த நீரைச் சிவலிங்கத் திருமேனிமேல் கொப்பளித்து உமிழ்ந்தார். இந்தச் செயலைச் சேடு’ (புதுப்புனல்) எறிய (ஊற்ற) என்று பாடுகிறார் அடிகளார். என்ன வியப்பு! இதே புதுப்புனலைத் தூய்மையான பாத்திரத்தில் கொணர்ந்து அபிடேகம் செய்தால், அது பொருள்பற்றிச் செய்கின்ற பூசனையாகும். அப்படிச் செய்கின்ற அபிடேகத்தில் இறைவன் மகிழ்ந்ததாகத் தெரியவில்லை. காளத்திநாதனை ஆகமமுறையில் வழிபட்ட சிவகோசரியார் பொன்முகலி ஆற்றிலிருந்து புதுப்புனலைத் தினமும் கொண்டுவந்து காளத்திநாதனுக்கு அபிடேகம் செய்தாரே, அந்த அபிடேகத்தில் காளத்திநாதன் மகிழ்ந்த தாகத் தெரியவில்லை. ஆனால், திண்ணனார் வாயிலிருந்து ஊற்றிய எச்சில்நீர், கங்கை நீரினும் சிறப்புடையது என்றல்லவோ சிவகோசரியின் கனவில் இறைவன் கூறினான் !