பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஒரு பொருள் கல் போன்ற வலிமை உடையதாக இருப்பின், அது உருகுவதற்கு வேறு துணைகள் இருத்தல் வேண்டும். அடிகளாருடைய கல் போன்றதாகிய நெஞ்சம் உள்ளே உருக்கமும், புறத்தே கசிவும் பெற்று மாறுதல் அடையும்படிச் செய்தார் ஒருவர். அப்படிச் செய்தவர் இந்த உருக்கமும், கசிவும் மாறி, பழைய நிலைக்குச் சென்றுவிடாதபடி அதன் அண்மையிலேயே நின்று பார்த்துக்கொள்பவர்போல் புறத்தே குருநாதர் வடிவில் இருந்த அவர் தம் உள்ளே புகுந்தார் என்கிறார் அடிகளார். 'அப்படி அவர் புகுவதற்குக் காரணம் என்னிடம் எதுவுமில்லை. என்பால் இயல்பாய் அமைந்திருத்தது கல்போன்ற மனம்தான். அதனை உருக்கமும், கசிவும் கொள்ளுமாறு செய்ததனால் அவருக்கு ஒன்றும் லாபமில்லை. என்றாலும், தம் கருணை காரணமாகவே என் நெஞ்சை உருக்கியவர், அந்த உருக்கத்தைக் காவல் செய்கிறவர்போல என் உள்ளே புகுந்து நின்றுவிட்டார்.' 'உள்ளத்தை உருக்கியதோடல்லாமல் அந்த உருக்கம் வேறெங்கும் பாய்ந்துவிடாமல் அவர் புகழ் பாடும் நன்னெறி யில் செல்லுமாறு செய்தார். இவ்வளவு பெரிய காரியத்தை அவர் ஒன்றும் மறைவாகச் செய்யவில்லை; நாடறியவே செய்தார். இதனால் ஓர் அற்புதமான பயன் விளைந்தது. அது என்ன தெரியுமா? என்னிலிருந்து தோன்றும் சொற்கள் ஒரு புதிய ஆக்கம் பெற்றன. அதுவரை நான் பேசிக்கொண்டிருந்த சொற்கள், நான் கண்டு, கேட்டுப் பழகும் பொருட்களைக் குறித்தனவாகவே இருந்தன.” 'நெஞ்சை உருக்கியதால், அந்நெஞ்சு நன்னெறியில் சென்றதால், நான் சொல்லும் சொற்கள் புதிய பொருளைத் தாங்கி வந்தன. அதுவரை, சொல்லுக்குள் அடங்காது நின்ற அவர் இப்பொழுது என் சொல்லுக்குள் நின்றார்.