பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயிற் பத்து 219 குயிலின் நிறத்தோடு ஒத்த இறைவியின் கணவன் என்று முதற்பாட்டில் கூறியவர், இப்பாடலில் அந்த நாயகனின் பெருமையைக் கூறுகிறார். குயிலே! அவன் கோல மங்கை நாயகன்மட்டும் அல்லன், தான் இருக்க வேண்டிய சிவலோகத்தை விட்டுவிட்டு, இம்மண்ணிடை வந்து, மிகச் சாதாரணப் பிறவியாகிய மனிதனை ஆட்கொண்ட வள்ளல் ஆவான். இது ஏன் நிகழ்ந்தது? இதற்குரிய தகுதியை மனிதச்சாதி பெறவில்லை யானாலும் அவன் வந்து ஆட்கொண்டான் என்றால் அது அவனுடைய வள்ளல் தன்மைக்கும் எளிவந்த தன்மைக்கும் ஒர் எடுத்துக் காட்டாகும். ‘குயிலே ஆட்கொண்டான் என்று சொன்னேனே, அதன் பொருள் தெரியுமா? உயிர் இனத்தில் மிக உயர்ந்தவர்கள் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் மனிதர்க்குக்கூட ஆட்கொள்வது என்றால் என்ன என்று தெரியாது. உனக்கு எங்கு தெரியப்போகிறது? இதோ விளக்கமாகச் சொல்கிறேன், கேள். வான் பழித்து இம்மண் புகுந்த அவன் என்ன செய்தான் தெரியுமா? என் ஊன் பழித்து உள் புகுந்தான். அதில் என்ன புதுமை என் கிறாயா? என் ஊன் உடம்பு ஒரு மாறுதலும் அடையாமல் அப்படியே இருக்க, எப்படி அவன் உள்ளே புகுந்தான்? ஆம். அதுதான் அவன் தனிச்சிறப்பு. உள்ளே புகுகின்ற வரையில் திருவாதவூரனாகிய நான்’ என்ற ஒன்று, உள்புகுந்தவனாகிய 'அவன்’ என்ற ஒன்று ஆக இருவர் இருந்தோம். நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால், அவன் உள்ளே புகுந்தவுடன், ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி நடைபெற்றது. புகுகின்றவரையில் நான் என்றும் அவன் என்றும் இருவராகி இருந்த நிலை மாறி, நான் என்பதை விழுங்கி, உணர்வு வடிவமாக அவன் ஒருவனே நின்றுவிட்டான்.'