பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்சுண்ணம் 15 என்ற விடை மனத்திடை வருகின்றது. அகிலப் பிரபஞ்சத்திலும் எல்லாப் பொருளிலும் இருந்து ஆடிக்கொண்டேயிருக்கும் ஒருவனுடைய அடையாளமே தில்லைவாணன் வடிவம் என்ற நினைவும் உடன் தோன்றுகிறது. அப்படியானால், பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்து நிற்கின்ற ஒருவனுக்கு இந்தச் சிறிய உரலில் பொடி இடித்து மாளாது என்று நினைக்கின்றார் அடிகளார். அந்த நினைவின் பயனாக ஒரு கற்பனை தோன்றுகிறது. பிரபஞ்சம் முழுதும் விரிந்திருக்கின்ற ஒரு பொருளுக்குப் பொடியிடிக்க எவ்வளவு பெரிய உரல் வேண்டும்; நாம் வாழும் இந்த உலகம்போன்ற பல உலகங்கள் விண்ணிடை உள்ளன. அவை அனைத்தையும் ஒன்றுசேர்த்து ஓர் உரலாகச் செய்யவேண்டும் என்ற கருத்தில் 'வையகம் எல்லாம் உரலதாக’ என்றார். சிறிய உரலுக்குச் சிறிய உலக்கை போதுமானதாக இருக்கலாம், வையகம் எல்லாம் உரலதாகும்போது, அதற்கேற்ற உலக்கை மாமேரு மலையேயாகும். எனவே, "மாமேரு என்னும் உலக்கை நாட்டி' என்றார். சாதாரணச் சுண்ணம் இடிப்பதற்கு மஞ்சள் முதலிய மணப்பொருட்கள் போதுமானவையாகும். ஆனால், இங்கு இவ்வளவு பெரிய உரலிலிட்டு இடிப்பதற்கு என்ன தேவை: மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி’ என்று அடிகளார் கூறுவதால் சத்தியமே மணப்பொருளாக இங்குப் பேசப்பெற்றது. மணப்பொருட்களுள் மஞ்சள் இடத்தைப் பெறுவதுபோல இங்குச் சத்தியம் முதல் இடத்தைப் பெறுகின்றது. மஞ்சளுடன் ஏனைய பொருட்கள் சேர்வதுபோலச் சத்தியத்துடன் மனத்தில் உண்மை, சொல்லில் வாய்மை, செயலில் மெய்ம்மை ஆகியவை கலக்கப் பெறுகின்றன.