பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 நிலைகளில் உள்ளவர்கள் பேசப்படுகிறார்கள். அவர்கள் தொழுபவர்கள், அழுபவர்கள், துவள்கிறவர்கள் ஆகிய மூவகையோர். துவள்கையர் என்ற சொல்லுக்கு, அருள் கிட்டாமையினால், மனம், உடல் துவண்டு போகின்றவர்கள் என்று பலரும் பொருள் கூறியுள்ளனர். இதற்கு மாறாக, இந்த மூன்று நிலைகளும் ஒருவரே அடுத்தடுத்து அடையும் நிலை என்றும் கொள்ளலாம். அருணோதயத்தில் இறைவழிபாட்டில் ஈடுபட்டவர்கள் பார்த்தவர்கள் முதலில் அனைவரையும்போல, உடலால் தொழுதனர். இவர்களுடைய தொழுகை, உள்ளத்தில் தோன்றிய ஆழமான இறையன்பு காரணமாக நடை பெற்றதாகும். எனவே, தொழுகையின் முடிவு அழுகையாக அமைந்தது. இறையன்பு மிகுதிப்பட மிகுதிப்பட, இறையனுபவம் வலுப்பெறுகிறது. வலுப்பெற்ற இறையனுபவத்தின் புற வெளிப்பாடுதான் அழுகை, தீவிர பக்தர்கள் இந்த இரண்டு நிலைகளையும் கடந்து மூன்றாவது நிலையை அடைகின்றனர். அதுவே துவள்கின்ற நிலையாகும். அழுகை வெளிப்படும் பொழுது, அவருடைய பொறி, புலன்கள், அந்தக்கரணங்கள் ஆகிய அனைத்தும் செயலிழந்து விடுகின்றன. சிறிய அளவில் தொடங்கிய அழுகை, வளர்ச்சி அடையும்பொழுது இவர்கள் தற்போதம் இழந்தவர்களாய் உடல் துவண்டு விடுகின்றனர். இறையனுபவத்தின் முதிர்ந்த மூன்றாவது நிலையாகும் இது. அதனைக் கூறவந்த அடிகளார், இறையனுபவத்தில் தோய்கின்றவர்களுடைய மூன்று நிலைகளையும், நிரல் நிரையாக தொழுகையர், அழுகையர், துவள்கையர் என்ற சொற்களால் குறிக்கின்றார். தன் நாமம் கெட்ட நிலையாகும் இது. இறுதி அடியில் 'என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் என்று அடிகளார் பாடும்பொழுது, ‘என்னையும் என்ற சொல்லில் உள்ள உம்மையின் மூலமே மாபெரும் பொருட்சிறப்பைத் தந்துவிடுகிறார்.