பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 எங்களுக்கு அருள் செய்யும்படி தங்களையும் தூண்டுவாள்' என்ற கருத்துப் பட அணங்கின் மணவாளா என்றார். பாடலின் கடைசி அடி இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டு அருள் புரியும் எம்பெருமான்' என்பதாகும். இதில் அறுத்தல், அருள்புரிதல் என்ற இரண்டு செயல்கள் குறிப்பிடப்படுகின்றன. இதில் எது முந்தையது? பிறப்பை அறுத்துவிட்டு, அருள் புரிந்தானா? அருள் புரிந்துவிட்டு பிறப்பை அறுத்தானா? இவை இரண்டும் ஒரேகாலத்தில் நிகழ்ந்தவையாகும். பிறப்பை அறுப்பதற்கு அவன் கத்தி முதலியவற்றைக் கொண்டுவரவில்லை. பிறப்பை அறுப்பதற்கு அவன் எந்த முயற்சியும் செய்யவில்லை. அவன் அருள் புரிந்தான்; பிறப்புத் தானாக அறுபட்டது. மானிடர் அல்லாத தேவர், இயக்கர் முதலிய யாவர்க்கும் இந்த வாய்ப்பு இல்லை. சூக்கும உடலுடன் திரிபவர்கள் ஆதலின், இறைவனால் படைக்கப்பட்ட அழகிய மலர்களைப் பறித்து எடுத்து அழகிய மாலையாகக் கட்டி வழிபடும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. பரு உடல் இருப்பினும், விலங்குகளுக்கும் இந்த வாய்ப்பு இல்லை. இந்த மானிட வழிபாட்டுமுறை ஈடு இணையற்றது என்பதால், அம்பிகையேகூடக் காஞ்சியம்பதியில் மானிட வடிவுடன் வந்து, ஏகம்பனை மனிதர்களைப் போலவே பூசனை புரிந்தாள் என்று வரலாறு கூறுகிறது. அதேபோல், இந்திரன் முதலிய தேவர்கள் பலரும் குறிப்பிட்ட தலங்களில் இறைவனைப் பிரதிஷ்டை செய்து மானிட வடிவுடன் வழிபட்டார்கள் என்ற கதைகளும் உண்டு. ஆக, பருஉடலுடன் செய்யப்படும் மானிடர் வழிபாட்டு முறையின் சிறப்பிற்கு இவை எடுத்துக் காட்டுகளாகின்றன. 374. அது பழச் சுவை என அமுது என அறிதற்கு அரிது என எளிது என அமரரும் அறியார்